நாட்டின் 69-வது குடியரசு தினத்தை ஒட்டி டெல்லி ராஜ்பாத்தில் முப்படை மற்றும் சிறப்பு படை வீரர்கள் கம்பீர அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
நாட்டின் 69-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக,ஏதேனும் ஒரு நாட்டின் தலைவர் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார். ஆனால், இம்முறை 10 ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
ராஜ்பாத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு தலைவர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். தேசிய கொடியை ஜனாதிபதி ஏற்றியதை அடுத்து, முப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது. ராணுவ டாங்கிகள், பிரமோஸ் ஏவுகணை, விமானப்படை மற்றும் கடற்படையில் உள்ள நவீன தளவாடங்கள் அணிவகுத்தன.
நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் இடம் பெற உள்ளன.
குடியரசு தின அணிவகுப்பையும், 10 நாட்டு தலைவர்களின் வருகையையும் கருத்தில் கொண்டு, டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ், மத்திய பாதுகாப்பு படைகள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் வீரர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் கருப்புப்பூனை படை வீரர்களும் அடங்குவர்.
அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதை, இந்தியா கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள்.