விலங்குகள் உரிமைகளுக்காக ஐ.நா. தலைமையகத்தில் போராட்டம் நடத்திய நாய்கள்

226 0

விலங்குகள் உரிமைகளுக்காக ஐ.நா. தலைமையகத்தில் நாய்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்புகளை, குறிப்பாக மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்வதற்கு விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு விலங்குகளை ஆய்வுக்கூடங்களில் பரிசோதனைக்காக பயன்படுத்தி வதைப்பதை தடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில், சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான ‘குரூவல்டி ப்ரீ இன்டர்நேசனல்’ மற்றும் பிரபல அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘தி பாடி ஷாப்’ இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது. அதுவும், விலங்குகளின் உரிமைக்காக விலங்குகளே போராட்டம் நடத்தின.

வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நன்கு பயிற்சி பெற்ற 8 நாய்கள், ஐ.நா. தலைமையகத்திற்கு வெளியே அமர வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கழுத்தில், ‘விலங்குகள் பரிசோதனையை தடை செய்,  தீங்கிழைக்கும் அழகுசாதன பொருட்களை கைவிடு’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் தொங்க விடப்பட்டிருந்தன. விலங்குகள் போராட்டம் நடத்துவது உலகில் இதுவே முதல் முறை ஆகும்.

சர்வதேச மனிதாபிமான சமூகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பரிசோதனைக்கு பயன்படுத்துவதால் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் விலங்குகள் பாதிக்கப்படுவதாகவும், அவற்றில் பெரும்பாலான விலங்குகள் எதிர்விளைவுகளின் காரணமாக இறந்துவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment