மதுரையில் 28-ந் தேதி கவர்னர் ஆய்வுப்பணியில் ஈடுபடும் போது முதல்வரும் மதுரை வருகிறார். அவர் கவர்னருடன் இணைந்து தூய்மைப்பணியை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் மதுரை வந்த கவர்னர் ஆய்வுப்பணியில் ஈடுபட ஏற்பாடுகள் நடந்த நிலையில் அந்த நிகழ்ச்சி திடீரென்று ரத்தானது.
இந்த நிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை (27-ந் தேதி) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார். அழகர்கோவில் ரோட்டில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அவர் தங்குகிறார்.
28-ந் தேதி காலை மதுரையில் நடைபெறும் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதன் பிறகு காலை 11 மணியளவில் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் “தூய்மை பாரதம்” திட்டத்தின் கீழ் தூய்மைப்பணியில் ஈடுபடுகிறார். பின்னர் மாவட்ட செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துகிறார்.
அன்று மாலையில் மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்யும் கவர்னர், இரவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் (29-ந் தேதி) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு விட்டு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ இல்ல காதணி விழா மதுரை பாண்டிகோவிலில் வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 28-ந் தேதி காலை 10 மணிக்கு விமானம் மூலம் மதுரை வருகிறார்.
விமான நிலையத்தில் இருந்து ரிங் ரோடு வழியாக பாண்டிகோவிலுக்கு செல்லும் முதல்வர், அங்குள்ள ஆலவாய் மண்டபத்தில் நடைபெறும் காதணி விழாவில் பங்கேற்கிறார். அதன் பின்னர் அவர், கார் மூலம் திருச்சி புறப்பட்டுச் செல்கிறார்.
மதுரையில் 28-ந் தேதி கவர்னர் ஆய்வுப்பணியில் ஈடுபடும் போது முதல்வரும் மதுரை வருகிறார். அவர் கவர்னருடன் இணைந்து தூய்மைப்பணியை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக அமைச்சர் இல்ல விழா நடைபெறும் பாண்டி கோவில் அருகே சக்கிமங்கலத்தில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
முதல்வரும், கவர்னரும் தூய்மைப்பணி மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கவர்னர், முதல்வர் ஆகியோர் மதுரை வருகையால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளனர்