விஜயேந்திரருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ள கமல்ஹாசனின் செயலானது அதிர்ச்சி அளிப்பதாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா நடத்தியப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற காஞ்சி மடத்தைச் சேர்ந்த பீடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்காமல் அவமதித்ததற்குத் தமிழகமே கொந்தளித்துக்கிடக்கிது.
விஜயேந்திரருக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்துள்ள கமல்ஹாசனின் செயலானது அதிர்ச்சியினை அளிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது என்பது தமிழன்னையைப் போற்றித் தொழுகிற ஓர் மரபு; அதற்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவதென்பது ஒரு அடிப்படை மாண்பு. இதனை விஜயேந்திரர் செய்யத் தவறியதை இன உணர்வுள்ள தமிழர்கள் எவராலும் சகித்துக் கொள்ள முடியாது.
இத்தகைய நிலையில் தமிழுக்கு நேர்ந்த அவமரியாதையைக் கண்டிக்க மறுத்து அச்செயலுக்கு ஆதரவாய் கருத்து வெளியிட்டிருக்கும் கமல்ஹாசனுக்குக் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன்.
கண்ட இடத்திலெல்லாம் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ள கமல்ஹாசன் எதனைக் கண்டவிடமெனக் குறிப்பிடுகிறார்? எத்தனை கண்ட இடங்களில் தேவையற்று தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடப்பட்டி ருக்கிறது? கமல்ஹாசனிடம் பட்டியல் ஏதும் இருக்கிறதா? ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் அதுவும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் உள்ளிட்ட பலதரப்பட்ட பெருமக்கள் வீற்றிருக்கிற ஒரு அவையில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதில் என்ன பிழை? அதே கண்ட இடத்தில்தானே தேசியகீதம் பாடப்பட்டது. அதனை வேண்டாமென்று கமல்ஹாசன் கூறவில்லையே? ‘எழுந்து நிற்க வேண்டியது எனது கடமை; தியானம் செய்ய வேண்டியது அவரது கடமை’ என்கிற கருத்தின் மூலம் விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த தேவையில்லை என்கிறாரா கமல்ஹாசன்?
கண்ட இடத்தில் தமிழைத் தொழக்கூடாது என்பவர் கண்ட இடத்தில் தியானம் செய்யக்கூடாது என விஜயேந்திரருக்கு அறிவுறுத்த மறுப்பதேன்?
கமல்ஹாசனுக்கு உற்ற நண்பராக இருக்கிற கவிப்பேரரசு வைரமுத்து மீது வசைமொழிகள் பொழிந்த போதும், அவரின் தாயை இழிவாகப் பழித்துரைத்த போதும் வாய்திறக்காது மெளனமாய் தியான மனநிலையில் இருந்த கமல்ஹாசன் விஜயேந்திரர் விவகாரத்தில் வாய்திறந்து அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதன் அரசியல் என்ன என்பதனை விளக்க வேண்டும். விஜயேந்திரர் தமிழன்னையை அவமதித்ததைவிட அவருக்கு ஆதரவாய் கமல்ஹாசன் கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் அவமரியாதையை ஏற்படுத்துகிறது. எனவே, அக்கருத்தினை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், தன்னை உத்தமராகக் காட்டிக்கொள்ள மக்கள் மீது பழியைப் போடும் போக்கை கைவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.