ஊடகவியலாளர்களின் தொழில்துறையை மேம்படுத்துவதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஊடகவியலாளர்களின் தொழில்வாண்மையை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் புலமைப்பரிசில் நிதியை அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 739 ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு ஊடகப் பயிற்சிக்கான நிதி உதவி அஸிதிஸி புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.
இதேவேளை தகவல் அறியும் சட்டம் தொடர்பாக இந்த ஆண்டில் விரிவான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட இருப்பதாகவும் ஊடகப் பயிற்சி நிறுவனத்தின் பணிகளும் விரிவுபடுத்தப்படவுள்ளதாகவும் ஊடகப் பயிற்சித் திட்டத்தின் கீழ் 60 ஊடகவியலாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரையிலான நிதி உதவி வழங்கப்படுவதுடன் இந்தத் தொகை மீள அறவிடப்படமாட்டாது என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர் ரமணி குணவர்த்தன, ஏனைய அமைச்சின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது