கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பிரதேச சபைகளுக்கு ஜீ.ஐ.இரும்பு கம்பிகள் பகிர்ந்தளித்து அரசுக்கு 3 1/2 கோடி நஷ்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோருக்கெதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4ம் திகதி விசாரசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்துடுவ இன்று உத்தரவிட்டுள்ளார்.
வழக்கின் பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆவணங்கள் முறைப்பாட்டாளர்கள் மூலம் வழங்கப்பட்டதன் பின்னர் நீதிபதி இந்த தினத்தை நியமித்துள்ளார்.
2014ம் ஆண்டு ஒக்டோபர் 31 டிசம்பர் 31 காலப்பகுதிக்குள் கொழும்பிலுள்ள பிரதேச சபைகளுக்கிடையில் இரும்பு கம்பிகளை பகிர்ந்தளித்து அரசுக்கு 36,509,127 ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆகியோருக்கெதிராக சட்ட மா அதிபர் மூலம் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் பிரதிவாதிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
அதன்போது பிரதிவாதிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஆவணங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் ஆவணங்களில் குறைகள் இருப்பின் எதிர்வரும் மாதம் 23ம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு தெரிவித்த நீதிபதி வழக்கு எதிர்வரும் மாதம் 23ம் திகதி
மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
குறித்த வழக்கிற்கு அரச தரப்பு சட்டத்தரணி அசாத் நவவி ஆஜராகியிருந்ததுடன் பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணிகளான அணில் சில்வா, ஜயந்த வீரசிங்க, ஷசீந்திர பெர்னாண்டோ ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.