பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறை – பி.மாணிக்கவாசகம்

510 0

உள்ளுராட்சித் தேர்தலுக்கான திகதி நெருங்கி வருகின்ற சூழலில் தேர்தல் வன்முறைகள், தேர்தல் நடைமுறை சட்டமீறல்கள் பற்றிய செய்திகளும் தகவல்களும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், தேர்தல் கால வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் போன்றவற்றிற்குக் குறைவிருப்பதில்லை. குறிப்பாக விகிதாசாரத் தேர்தலில், விருப்பு வாக்கு முறைமை தேர்தல் வன்முறைகளுக்கு அதிக வாய்ப்பளித்திருந்தமை வரலாற்று அனுபவமாகப் பதிவாகியிருக்கின்றது.

ஆனால், தொகுதி முறை, விகிதாசார முறை என்ற இரண்டும் கலந்த ஒரு தேர்தலாக அமைந்துள்ள 2018 ஆம் ஆண்டின் உள்ளுராட்சித் தேர்தலில் விருப்பு வாக்குக்கான வன்முறைகள் இல்லாதிருப்பது பலருக்கும் ஆறுதலளிப்பதாக உள்ளது. இருப்பினும் இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாகிய பெண்களுக்கான 25 வீது இட ஒதுக்கீடு வழமையான தேர்தல் வன்முறைகளை மேலும் அதிகரிக்கச் செய்வதற்கு வாய்ப்பளித்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

நாட்டு சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர். ஆணும் பெண்ணும் இணைந்ததே வாழ்க்கை என்பது இயற்கையின் நீதி;. ஆனால், ஆண் ஆதிக்கம்பெற்று, பெண்களை அடக்கி ஆள்கின்ற நிலைமையே, நடைமுறை வாழ்க்கை நிலைமையாக உள்ளது. ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள சமூகத்தில் பெண்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்த உரிமை மறுப்பானது மறைமுகமான செயற்பாடுகளின் மூலம் இயல்பாகவே முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சமூகத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களிலும், கல்வி அறிவு குறைந்த மட்டத்தில் உள்ள குடும்பங்களிலும் பெண்களின் உரிமை மறுக்கப்பட்ட நிலைமையே சாதாரண வாழ்க்கை நியமமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. கலாசார விழுமியங்களில் ஊறியுள்ள குடும்பங்கள், கல்வி அறிவில் மேம்பட்ட குடும்பங்கள், செல்வ செழிப்புள்ள குடும்பங்களிலும்கூட, இது ஆழமாக வேரூன்றியிருக்கின்றது என்பது சமூகவியலாளர்களின் கருத்து.

சனத்தொகையில் 52 வீதமாக இருந்த போதிலும், நாட்டின் உழைக்கும் சக்தியாக பெண்களின் வகிபாகம் 35 வீதம் மட்டுமே. அதேநேரம் நாடளாவிய ரீதியில் 23.4 வீதம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களாகக் காணப்படுகின்றன. ஆயினும், நாட்டுக்கு வெளிநாட்டு செலவாணியை ஈட்டித் தரும் புலம்பெயர் தொழிலாளர்களில் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றார்கள். ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் பெருந்தோட்டத்துறை என்பவற்றின் தொழிலாளர் சக்தியில் பெண்கள் அதிகமாகக் காணப்படுகின்றார்கள்.

இருந்தபோதிலும். நாட்டில் சட்டங்களை இயற்றுகின்ற அதியுயர் பீடமாகிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. நாட்டின் ஆட்சித்துறையிலும். முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்கின்ற பொறுப்பிலும் ஒப்பீட்டளவில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அரசியலில் பெண்களுக்குள்ள சமத்துவமின்மையே இதற்கு முக்கிய காரணமாகும். பால்நிலை சமத்துவமின்மை அட்டவணையில் இலங்கை 75 ஆவது இடத்தில் இருப்பதாக ஐநாவின் அபிவிருத்தித் திட்டத்தின் கணிப்பீடு கூறுகின்றது.

உலகில் முதலாவது பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றிருக்கின்றது. அதேபோன்று நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியைப் பெண் ஒருவர் வகித்திருந்தார் என்ற பெருமைiயும் கொண்டிருக்கின்ற போதிலும், அரசியலில் பால் நிலை சமத்துவத்தில் நாடு முன்னேற்றம் காணவில்லை. இந்த நிலையில் பெண்களுக்கு அரசியலில் குறிப்பிட்ட இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டத்தின் பயனாக உள்ளுராட்சி தேர்தலில் 25 வீத இட ஒதுக்கீடு கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது.

பால்நிலை சமத்துவம்

பால்நிலை சமத்துவம் என்பது ஒரு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேம்பாட்டிற்கு அவசியமானது. அடித்தளமானதும்கூட. ஆண்களோடு பெண்களும் இணைந்து செயலாற்றுவதன் ஊடாக நிலையான அபிவிருத்தி இலக்குகளை எட்ட முடியும் என்பது சர்வதேச நிலைப்பாடாகும். இதற்கு, அனைத்துத் துறைகளிலும் பால்நிலை சமத்துவம் பேணப்பட வேண்டும். வளர்முக நாடுகளின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள காரணிகளில் பால்நிலை சமத்துவமின்மை முக்கியமாகக் கருதப்படுகின்றது.

ஆணாதிக்கம் மிகுந்த சமூகங்களில் மாற்றங்களை நோக்கி, பெண்கள் பால்நிலை சமத்துவத்திற்காகப் போராடுகின்ற போக்கு தலையெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வி, தொழில்வாய்ப்பு என்பவற்றில் பெண்களின் பங்களிப்பு முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும், தீர்மானங்களை மேற்கொள்ளும் முக்கிய பதவிகளிலும், தேசிய மட்டத்தில் கொள்கைகளை வகுக்கும் பதவி நிலைகளிலும், நாட்டின் ஆட்சிப் போக்கிற்கு அடித்தளமாக உள்ள சட்டமியற்றுகின்ற நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கு உரிய இடமளிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. இந்த நிலைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகள் சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

பால்நிலை சமத்துவமற்ற அட்டவணையில், ஆண் பெண் சமத்துவம் மூன்று பரிமாணங்களில் கணிக்கப்படுகின்றது. இனவிருத்திச் சுகாதாரம், வலுவூட்டல், தொழிலாளர் சந்தைப் பங்களிப்பு ஆகிய மூன்று நிலைகளில் சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று அந்த அட்டவணை வலியுறுத்துகின்றது. இலங்கையைப் பொறுத்தளவில் இந்த மூன்று நிலைகளிலும் பெண் சமத்துவ நிலைமை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

குடும்ப, சமூக, கலாசாரப் பண்பாட்டு, அரசியல் ரீதியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதற்கு இந்த பால்நிலை சமத்துவமின்மை முக்கிய காரணியாகக் கண்டறியப்பட்டிருக்கின்றது. இலங்கையில் பரவலாகக் காணப்படுகின்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாலியல் சமத்துவமின்மையின் முக்கிய குறியீடாகக் கருதப்படுகின்றது. அதேவேளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆயினும் குடும்ப வன்முறை தொடக்கம் சமூக, வேலைத்தள வன்முறைகள், பாரபட்சம், அரசியல் ரீதியான சமத்துவமின்மை என்பன இதுவரையில் மனித உரிமை மீறலாகவோ அடிப்படை மனித உரிமை மீறலாகவோ – முக்கிய பிரச்சினையாக மேலெழவில்லை.

இருப்பினும் பால்நிலை சமத்துவமின்மை என்பது தேசிய கொள்கை மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரையில் வியாபித்திருக்கின்றது. குற்றவியல் சட்டக் கோவையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் 1995 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தில் பாலியல் வல்லுறவு, தகாத பாலியல் உறவு, பாலியல் துஸ்பிரயோகம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் ரீதியான சுரண்டல் என்பன தண்டனைக்குரிய குற்றங்களாக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச சட்ட விதிகள் மற்றம் பெண்கள் தொடர்பிலான 1993 ஆம் ஆண்டு சாசனம் என்பவற்றின் உள்ளடக்கங்கள் அல்லது அவற்றின் அம்சங்கள் தேசிய சட்ட விதிகளில் இலங்கையில் உள்ளடக்கப்படவில்லை. இதன் காரணமாக பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், பால்நிலை சமத்துவத்தைப் பேணுவதிலும் இலங்கை பின்னடைந்திருக்கின்றது என்பதே சர்வதேச கணிப்பாகும்.

.இந்த நிலையில் 25 வீத இட ஒதுக்கீட்டு உரிமையின் அடிப்படையில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள அல்லது களமிறக்கப்பட்டுள்ள பெண்கள் பல்வேறு தேர்தல் வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கின்றார்கள். இந்தத் தேர்தல் வன்முறைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று பெண்கள் அமைப்புக்கள் குரல் கொடுத்திருக்கின்றன.

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகள்

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பெண்களின் உரிமைக்காகச் செயற்பட்டு வருகின்ற எட்டு அமைப்புக்களை உள்ளடக்கிய பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து கண்டனக் குரல் எழுப்பியிருக்கின்றது. அத்துடன் இத்தகைய தேர்தல் வன்முறைகளுக்கு உடனடியாக முடிவுகட்ட வேண்டும் என்றும் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையொன்றில் கோரியிருக்கின்றது.

தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வன்முறைகள் குறித்து ஊடக செய்திகளை ஆதாரமாகக் கொண்டு அந்த அறிக்கை நடைபெற்றுள்ள சம்பவங்கள் பற்றிய விபரத்தைக் குறிப்பிட்டிருக்கின்றது.

மொனராகல மாவட்டம், வெல்லவாய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பெண் வேட்பாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார். கிழக்கு மாகாணம், ஆரையம்பதி செல்வாநகர் பெண் வேட்பாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டு, வீட்டினுள்ளிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பெண் வேட்பாளர் ஒருவர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டதுடன் வீடொன்றில் கட்டிவைத்து மிரட்டப்பட்டு அவர் பொலிசாரிடம் மேற்கொண்ட முறையீட்டை மீளப்பெறுமளவுக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் புத்தளம் உள்ளிட்ட வேறு மாவட்டங்களில் முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் எதிர்கொண்ட வன்முறைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டிருக்கின்றது.

புத்தளம் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களிலும் பெண் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள பெண்கள் மதத் தலைவர்களின் அருவறுப்பான பேச்சுகளுக்கு ஆளாகியுள்ளதுடன் அவர்களின் குடும்பங்களும் இழிவான பேச்சுகளுக்கு ஆளாகியுள்ளன. மேலும் பெண் வேட்பாளர்கள் தொடர்பான ஆபாசமான கருத்துக்களும், அவர்களது இனம், மதம் சார்ந்து துவேசம் மிக்க இழிவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவதையும் துண்டுப்பிரசுரங்களாக அனுப்பப்படுவதையும் பரவலாகக் காணக் கூடியதாகவுள்ளது என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

இதையும்விட நல்லூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சியொன்றைச் சேர்ந்த பெண் வேட்பாளர் அச்சுறுத்தப்பட்டுள்ளார். கணவர் இருக்கின்றாரா, வீட்டில் பெண்கள் இருக்கின்றார்களா, வீடு எங்கே இருக்கின்றது அங்கே வருகின்றோம் என்று தொலைபேசி மூலமாக அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளர்களுக்கு எதிராகப் பரவலாக வன்முறைகள் இடம்பெற்றுள்ளதுடன், பாலியல் ரீதியாக வாய்மொழி மூலமான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரவில்லை என கூறப்படுகின்றது. சுயமரியாதையைக் கருத்திற்கொண்டு, தமக்கு இழைக்கப்படுகின்ற தேர்தல் வன்முறைகள் அச்சுறுத்தல்கள் குறித்து முறையிடுவதற்குத் தயங்குவதாகப் பல வேட்பாளர்கள் கூறியுள்ளனர். அரசியலில் குதித்துள்ள போதிலும், தேர்தல் போட்டி நிலைமை காரணமாக பெண்கள் என்ற காரணத்திற்காக தங்களுடைய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்துகின்ற சம்பவங்கள் வெளியில் வருவதன் மூலம் தமது குடும்ப கௌரவமும் பாதிக்கப்படும் என்ற அச்சமும் அவர்களுடைய மௌனத்திற்கு முக்கிய கரணம் என அவர்கள் தெரிவி;த்திருக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகள்

சாதாரணமாக தேர்தல் பரப்புரை காலத்தில் தேர்தல் வன்முறைகள் பரவலாகவும் பல வடிவங்களிலும் இடம்பெறுவது சாதாரண நிகழ்வாகக் கருதப்படுகின்றது. ஆயினும் வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ள பெண்களுக்கு, பெண்கள் என்ற காரணத்தினால் பல்வேறு வடிவங்களில் வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. இதனால் தேர்தல் கால வன்முறைகள் அச்சுறுத்தல்கள் என்பவற்றில் இருந்து பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகள் விசேட கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அத்தகைய தேர்தல் வன்முறைகள் என்ன என்பது விரிவாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தேர்தல் செயன்முறையில் ஜனநாயக ரீதியான பெண்களின் சுதந்திரத்திலும், பெண்களின் சம பங்களிப்பிலும் குழப்பத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் வகையில், தேர்தல் காலங்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற தீங்குகளும் தீங்குகளுக்கான அச்சுறுத்தல்களும் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

பெண் லேட்பாளர்களுக்கு தீங்கு விளைவிப்பதும், அத்தகைய தீங்குக்கான அச்சுறுத்தல் விடுத்தலும் குறிப்பிடத்தக்கது. இதில் பெண் வேட்பாளர்களைத் தொந்தரவு செய்தல், மிரட்டுதல், உடலியல் ரீதியாகத் தீங்குத் தீங்கு விளைவித்தல் அல்லது அவர்களைப் பலவந்தப்படுத்துதல் அச்சுறுத்துதல், நிதி வடிவ ரீதியில் அழுத்தங்களைப் பிரயோகித்தல் என்பன உள்ளடங்குகின்றன. இந்த சம்பவங்கள் பெண் வேட்பாளர்களுடைய வீடுகளில், தனிப்பட்ட இடங்கள் அல்லது பொது இடங்களில் மேற்கொள்ளப்படலாம்.

பெண் வேட்பாளர்கள் மட்டுமல்ல ஏனைய பெண்களுக்கும் தேர்தல் காலத்தில் வன்முறைகள் பிரயோகிக்கப்படலாம் என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது. தேர்தலில் ஒரு வேட்பாளராக, ஒரு வாக்காளராக அல்லது தேர்தல் ஆணைக்குழு உறுப்பினராக அலி;லது தேர்தல் செயற்பாடுகளில் ஒரு பெண் வகிக்கின்ற பாகத்தை நோக்கியதாகவும், தேர்தல் சூழமைவுடன் தொடர்புடையதாகவும் இருக்கும் நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற பாதிப்புகள் பெண்களுக்கு எதிரான தேர்தல் வன்முறைகளாகக் கவனத்திற் கொள்ளப்படுகின்றன.

இந்த வன்முறைகள் அனைத்தும் பால்நிலை அடிப்படை வன்முறை மற்றும் அரசியல் வன்முறை என்னும் இரண்டு வகைகளுக்குள் அடங்குவதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு குறித்துக் காட்டியிருக்கின்றது. அதேவேளை, தனிநபருக்குத் தீங்கு ஏற்படுத்தல் மற்றும் இலங்கையின் சமாதானமான ஜனநாயகத்துக்குப் பங்கம் விளைவித்தல் ஆகிய இரட்டைத் தாக்கங்களையும் இந்தத் தேர்தல் கால வன்முறைகள் ஏற்படுத்துகின்றன. பெண்கள் தொடர்ச்சியாக சத்தமின்றிய மறைந்த வடிவ வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்ற வகையில், இவ்வன்முறைகள் அவர்களது உரிமைகளை மீறுவதோடு தேர்தலின் நம்பகத்தன்மையை எதிர்மறையாகப் பாதிக்கின்றன என்றும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வரையறை செய்திருக்கின்றது.

பொதுவாகவே அரசியல் என்பது ஆண்களின் ஏகபோக ஆளுமையைக் கொண்ட களமாகவும், அங்கு பெண்களுக்கு இடமில்லை என்ற ரீதியில் ஆணாதிக்கம் மேலோங்கிய நிலையிலுமே காணப்படுகின்றது. பெயரளவிலேயே பெண்கள் அரசியலுக்குள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

அதேநேரம், பாரம்பரிய அரசியல் செயற்பாட்டைக் கொண்ட குடும்பங்களில் உதித்த பெண்கள், அரசியல்வாதியான கணவன் இறந்த பின்னர் அல்லது அரசியல்வாதியாகிய தந்தை இறந்த பின்னர், வாரிசு அடிப்படையில் (அது வெளிப்படையாகக் கூறப்படுவதில்லை) அரசியலுக்குள் உள்ளீர்க்கப்படுகின்றார்கள். இவ்வாறு அரசியலுக்குள் வருகின்ற பெண்கள் அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு போக்கையே காண முடிகின்றது. சுயமாக அடிமட்டத்தில் சமூக சேவைகளில் ஆரம்பித்து, படிப்படியாக அரசியலில் பிரவேசம் செய்து தலைமை நிலைமைக்கு வளர்ச்சியடைந்த பெண்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு ஆணாதிக்கம் மிக்க அரசியல் களத்தில் இடமளிக்கப்படுவதுமில்லை.

அரசியல் என்பது ஆண்களுக்கே உரித்தானது. பெண்களுக்கு அது பொருத்தமற்றது என்ற ஆணாதிக்கம் மேலோங்கிய அரசியல் சிந்தனைப் போக்கு கொண்ட அரசியல் செல்நெறியில் பெண்கள் விகிதாசார உரிமை அடிப்படையில் சுயமாக தேர்தலில் போட்டியிடுவதும், அரசியல் செய்வதும் இலகுவான காரியமல்ல. அந்த அரசியல் பயணம் என்பது கரடு முரடானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ,

இருப்பினும், சமூக, பொருளாதார, அரசியல் நிலைகளில் நாட்டை முன்னேற்றுவதற்காகவே பெண்களும் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகின்றது. ஆண்களோடு பெண்களும் இணைந்து அரசியலில் ஈடுபடும்போது, நாட்டின் நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறை அமைவதற்கும் நாடு முன்னோக்கிச் செல்வதற்கும் வழியேற்படும் என்பது பால்நிலை சம உரிமைவாதிகளின் நம்பிக்கை. அந்த வகையில் பெண்களுக்கு அரசியலில் இடமளிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கு, ஆண்களும் பெண்களும் இணைந்து செயற்பட முன்வரவேண்டியது அவசியமாகும்.

Leave a comment