ஆறாவது அறிவை சமயோசிதமாக பயன்படுத்தி துணிச்சலுடன் செயல்பட்டு நந்தினி சாதித்து காட்டியது தான் பெண்ணே நீ சாதிக்கப்பிறந்தவள் என்ற உணர்வை இளைய தலைமுறையினரிடம் தட்டி எழுப்பி இருக்கிறது.
திருவண்ணாமலை நந்தினி தலைமை செயலகத்தில் முதல்வரிடம் ரூ.1 லட்சம் பரிசும் விருதும் பெற்று தலை நிமிர்ந்து எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. நல்லது கெட்டது தெரியாத பருவம் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.
ஆனால் ஆறாவது அறிவை சமயோசிதமாக பயன்படுத்தி துணிச்சலுடன் செயல்பட்டு நந்தினி சாதித்து காட்டியது தான் பெண்ணே நீ சாதிக்கப்பிறந்தவள் என்ற உணர்வை இளைய தலைமுறையினரிடம் தட்டி எழுப்பி இருக்கிறது.
படிக்க வேண்டிய வயதில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் செய்த ஏற்பாட்டை கலெக்டரிடம் பேசி தடுத்து சாதித்து காட்டி இருக்கிறாள்.
சோகத்தை சுமந்து வாழும் நந்தினிகள் வரிசையில் பெண்களிடம் நம்பிக்கையை விதைத்து கர்வத்துடன் நிமிர்ந்து நிற்கிறாள். மொத்த பெண்ணினமும் அவளுக்கு அடிக்க வேண்டும் பெரிய ‘சல்யூட்’!.
குழந்தை திருமணம் என்பது இத்துடன் நின்று விடப் போவதில்லை. ஆனால் பல குழந்தைகளுக்கு தைரியத்தை கொடுக்கும். பல பெற்றோர்களை யோசிக்க வைக்கும் என்று நம்பலாம்.
சிறுவயதிலேயே பெண் குழந்தைகளை குடும்ப பாரத்தை சுமக்க வைத்து அவர்களது கனவு, லட்சியங்கள் அத்தனையையும் கருக்கி விடுகிறார்கள். இது பழங்காலத்தில் நடந்தால் விழிப்புணர்வு இல்லாத காலம் அது என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆண்களுக்கு நிகராக பெண்களும் போட்டி போட்டு முன்னேறும் இந்த காலத்திலும் இப்படி நடப்பதுதான் மிகப்பெரிய வேதனை.
படிக்க வைக்கும் அளவுக்கு மாறி வந்து விட்ட பெற்றோர், அவர்களை சொந்த காலில் நிற்கும் வரை தோள் கொடுக்க மட்டும் மறுப்பது ஏன்? அதற்காக பெற்றோர் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது.
அங்கொன்றும், இங்கொன்றுமாக கிராமங்களில் மட்டும் இந்த மாதிரி திருமணம் நடக்கவில்லை. நாகரீகம், கல்வி அறிவின் உச்சம் தொட்ட சென்னையிலும் நடக்கிறது. நடந்து கொண்டிருக்கிறது. எழுதப்படிக்க தெரியாதவளாக இருக்க கூடாது என்பதற்காகத்தான் படிக்க வைக்கிறேன். படித்ததெல்லாம் போதும் என்று பள்ளிப்படிப்பை முடித்ததும், பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். பலர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்ததும் கல்யாணத்தை முடித்து விடுகிறார்கள்.
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் பல மாணவிகள் கழுத்தில் தாலியுடன் கல்லூரிகளுக்கு வந்து செல்வதை பார்க்க முடிகிறது. இதற்கு பெற்றோர் சொல்லும் காரணம் ‘காலம் கெட்டுக்கிடக்குங்க. காலா காலத்தில் ஒருத்தன் கையில் பிடித்து கொடுத்து விட்டால். நம்ம கடமை முடிஞ்சிரும். கவலை இல்லாம இருக்கலாம் பாருங்க’ என்பதும்.
ஆனால் வாழ்க்கை முழுவதும் கவலையை தான் அந்த குழந்தைகளுக்கு சம்பாதித்து கொடுத்து செல்கிறார்கள் என்பது தான் உண்மை. அதை அவர்கள் உணர்வதில்லை. பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றத்துக்காக பேசுவதும், சட்டங்கள் கொண்டு வருவதும் மட்டும் முழு பலனை தராது.
ஒவ்வொருவரும் உணரவேண்டும். அவ்வாறு உணராத பட்சத்தில் இந்த நந்தினியை பின்பற்றி எழுந்து நில்லுங்கள். சமூகம் கை விட்டாலும் சட்டம் உங்களை கைவிடாது.
சுதந்திரத்துக்கு முன்பு பெண்களின் திருமண வயது 15 ஆகவும் ஆண்களின் திருமண வயது 18 ஆகவும் இருந்திருக்கிறது. சுதந்திரத்துக்கு பிறகு பெண்கள் சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து தன் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய உரிமை கொடுக்கும் சட்டம் வந்தது. 1955-ல் இந்து திருமண சட்டம் மற்றும் விவாகரத்து சட்டம் வந்தது. திருமண பதிவு கட்டாயமாக்கப்பட்டது. பலதார மணம் சட்டத்துக்கு புறம்பானது என்று அறிவிக்கப்பட்டது.
1978-ல் குழந்தை திருமண தடுப்பு சட்டம் வந்தது. அப்போதுதான் பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டது.
குழந்தை திருமண தடுப்பு சட்டப்படி திருமணத்தை நடத்திய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், புரோக்கர், புரோகிதர், பங்கேற்றவர்கள், சமுதாய தலைவர்கள், சமையல்காரர்கள் வரை அனைவரும் குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். தவறு செய்தவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜாமீனில் வெளிவர முடியாத தண்டனை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இரண்டும் சேர்த்துகூட விதிக்கப்படலாம்.
சட்டம் இருக்கு. தண்டனை இருக்கு. இவ்வளவு இருந்தும் குழந்தை திருமணம் குதூகலமாக நடப்பது ஏன்? உலகில் நடைபெறும் குழந்தை திருமணங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் நடப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதை தடுத்தால் மட்டும்தான் பெண் கல்வியும், பெண்களின் முன்னேற்றமும் முழு வெற்றி அடையும்.
இதற்கு தேவை அனைத்து மட்டங்களிலும் விழிப்புணர்வு. மாணவிகள் மத்தியில் குழந்தை திருமண தடுப்பு சட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
படிக்கும் ஆசைக்கு விரோதமாக, கட்டாயமாக திருமண பந்தத்துக்குள் பெற்றோர்கள் தள்ள முற்பட்டால் பெற்றோர்களிடம் முறையிட முடியாமல் போகலாம். பள்ளியிலேயே தகவல் தெரிவித்து பெற்றோர்களுக்கு உரிய முறையில் கவுன்சிலிங் வழங்கலாம். நந்தினி எடுத்த முடிவின் மூலம் அரசுக்கே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறாள். நந்தினி போன்ற இளம் பிராயத்தினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இதுதான்.