இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியை காக்க உயிரை துச்சமென கருதிய தியாகிகளின் தினமான இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் அமைப்புகள் பொதுக்கூட்டம், கருத்தரங்குகளை நடத்த இருக்கின்றன.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே மதராஸ் மாகாண சபையில் பல்வேறு வழிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டது. 1937-ம் ஆண்டு தொடங்கி வெவ்வேறு கட்டங்களில் இதற்கான போராட்டம் நடந்துள்ளன. அப்போது மதராஸ் மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் தலைவர் ராஜாஜி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும், பெரியாரும் மூன்று ஆண்டுகள் உண்ணா விரதங்கள், மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர்.
போராட்டத்தை நசுக்கிய காவல் துறை அடக்குமுறையை ஏவி விட்டது. இதில் முதல் உயிர்த்தியாகம் செய்தது நடராசன் என்பவர், பின்னர் தாளமுத்து என்பவரும் சிறையிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, உக்கிரமடைந்த போராட்டத்தால் அரசு பின்வாங்கியது.
1937-ம் ஆண்டு முதல் தமிழகமெங்கும் தமிழறிஞர்களால் கருத்தியல் அளவில் பரப்பப்பட்டுவந்த இந்தி எதிர்ப்பு, மக்கள் பங்கேற்கும் போராட்டமாக மாறியபோது சென்னைதான் அதன் மையமானது. சென்னையிலேயே அதிக அளவிலான போராட்டங்கள் நடந்தன. இதில் பங்கேற்ற வெகுமக்கள் திரட்சி என்கிற அளவில் சென்னைவாழ் அடித்தள மக்களுக்குக் கணிசமான பங்கு இருந்தது.
திராவிட இயங்கங்கள் தலையெடுத்த பின்னர் தமிழ் மொழி தங்களது உயிருக்கு நிகராக அனைவராலும் கருதப்பட்டது. இதன் காரணமாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், சிறுவர், மாணவர், வாலிபர், முதியவர் என அனைவரின் பங்கும் கணிசமாக இருந்தது.
1965-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி.மு.க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் தி.மு.க.வினருக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது.
மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர்.
தமிழ்தேசிய இயக்கங்கள், திராவிட கட்சிகள் என அனைத்து இயக்கங்களும் முழுவீச்சில் போராட்டங்களில் இறங்கியதன் விளைவாக, இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி மற்றும் ஆங்கிலம் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இப்போது பஞ்சாப், கர்நாடகா, வங்காளம் ஆகிய மாநிலங்களில் இந்தி எதிர்ப்பு கிளம்பியிருந்தாலும், இதற்கான விதை தமிழகத்தில் மொழிப்போர் தியாகிகள் விதைத்ததாக உள்ளது.