சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். அலுவலகத்தில் மாநில தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு நிலையத்துக்கு ரூ.83 லட்சம் மதிப்பில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட குளிர்பதன அறை, உறை நிலை வைப்பு அறை அமைக்கப்பட்டது.
இதை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
அங்கு ரூ.9 கோடியில் 1696 புதிய குளிர்சாதனப் பெட்டி மற்றும் உறைநிலை வைப்பு பெட்டிகள், ஸ்டெப் லைசர் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.
தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்காக நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தடுப்பூசி மருந்துகள் மாநில தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு நிலையத்தில் பெறப்பட்டு 10 மண்டல தடுப்பூசி மருந்து குளிர்பதன சேமிப்பு நிலையத்துக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது.
தடுப்பூசி மருந்துகள் தொடர் குளிர்பதன முறையில் திறம்பட பாதுகாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசி மூலம் பயன் அடைந்துள்ளனர். 2004-ம் ஆண்டு முதல் போலியோவால் எந்த குழந்தையும் பாதிக்கப்படவில்லை. இளம் சிசு ரண ஜன்னி நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி நோய் முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. தட்டம்மை நோய் குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து தடுப்பூசி மருந்துகளும் தயாரிப்பு முதல் மக்களுக்கு சென்றடையும் வரை ஒவ்வொரு நிலையிலும் உரிய குளிர் பதன முறையில் தொடர் பராமரிப்பு செய்யப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன் முறையாக ரூ.594 கோடியில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன், இயக்குனர் குழந்தைசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.