நாட்டில் இரத்தப் பற்றாக்குறை – தேசிய இரத்த மாற்று மத்திய நிலையம்

286 0

நாட்டில் இரத்த பற்றாக்குறையொன்று ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும்போது இந்நிலை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாகவும் தேசிய இரத்த மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வருடத்தின் ஆரம்ப 4 மாதங்களில் இரத்த தானங்கள் குறைவாக நடைபெறுகின்றது எனவும், பல்வேறு விபத்துகள் மற்றும் நோய்கள் காரணமாக இரத்த தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாகவும் தேசிய இரத்த மாற்று மத்திய நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு நிமிடமும் இருவருக்கும், ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் 120 பேருக்கும், ஒவ்வொரு நாளும் 2,880 பேருக்கும், ஒவ்வொரு மாதமும் 86,400 பேருக்கும் இரத்தம் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் இலங்கைக்கு 4 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறுதி பைந்துகள் தேவைப்படுகின்றன. இரத்த தான முகாம்களில் ஒருவரிடம் ஒரு பைந்து, அதாவது 450 மில்லி லீட்டர்களே பெறப்படுகின்றன. வருடமொன்றுக்கு தேவைப்படும் தொகையைப் பெற்றுக்கொள்ள 4 இலட்சத்து 50 ஆயிரம் பேர் இரத்த தானம் வழங்கவேண்டியுள்ளது. எனினும் பொதுமக்கள் இரத்த தானங்களுக்காக முன்வரும் நிலை குறைவடைந்துள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

நாட்டில் கடந்த 30 வருட யுத்தத்தின்போது அதிகமான இரத்த தேவை ஏற்பட்டபோதுகூட நாட்டில் இரத்த தட்டுப்பாட்டு நிலையொன்று உருவாகியதாக இல்லை. எனினும் இப்போது அவ்வாறான ஒரு நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. தட்டுப்பாடோ, பிரச்சினையோ ஏற்பட்ட பின்னர் தீர்வுத் திட்டங்களை தேடுவதைவிட எதிர்கொள்ள இருக்கும் நிலைமைக்கேற்ற முன்னேற்பாடுகளை மேற்கொள்வதே சிறந்தது.

நாடளாவிய ரீதியில் தேசிய இரத்த மாற்று மத்திய நிலையத்தின் 102 இரத்த சேகரிப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. 18 – 60 வயதுக்குட்பட்ட, 50 கிலோ கிராமிற்கு மேல் உடல் நிறையைக்கொண்ட, சுகதேகிகள் இரத்த தானம் அருகே உள்ள நிலையத்திற்கு சென்று இரத்த தானங்களை மேற்கொள்ளலாம்.

ஓ நெகடிவ், ஏ, பீ- பொசிடிவ், நெகடிவ் வகை குறுதி குறைவாகவே இருப்பதாகவும், அவ்வகை குறுதியுடையவர்கள் இரத்த தானத்திற்கு முன்வரவேண்டும் என்றும் 15-20 பேர் ஒன்றிணைந்து, இரத்த தானம் மேற்கொள்ள முன்வரும்போது தேசிய இரத்த வங்கியே முன்வந்து நடமாடும் இரத்த முகாம்களை நடத்தவும் தயாராக இருக்கின்றதாகவும் டாக்டர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், நாட்டுக்கு பெட் ஸ்கேனர் ஒன்றைப் பெற்றுக்கொடுத்த, பைட் கென்சர் டீம் தேசிய இரத்த மாற்று மத்திய நிலையத்துடன் இணைந்து மாபெரும் இரத்த தான முகாமொன்றை கடந்த ஞாயிறன்று ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நிகழ்வில் மூவின மக்களும், குழு அங்கத்தவர்கள், முப்படையினர் என 225 பேர் இரத்த தான முகாமில் கலந்துகொண்டு பங்களிப்பு வழங்கியிருந்தனர். கதீஜா பவுன்டேஷனின் தலைவர், எம்.எஸ்.எச்.முஹம்மத் தலைமையிலான குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு நாட்டு மக்களுக்கு சிறந்ததோர் முன்மாதிரியாகும்.

அதேபோன்று வருடா வருடம் இரத்த தானத்தில் முதலாம் இடம்பெறுகின்ற ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத்தினரும் இங்கு நினைவுகூறத்தக்கவர்கள். சிங்கள பெரும்பான்மையைக் கொண்ட நாட்டில் இஸ்லாமிய இயக்கமொன்று இரத்த தானத்தில் முதல் இடம்வகிப்பது சிறந்த முன்மாதிரி போன்றே முஸ்லிம்கள் பெருமைப்படவேண்டிய விடயமும் ஆகும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசர கால நிலைமையை கருத்திற்கொண்டு மக்கள் இன மத பேதம் மறந்து இரத்த தானங்களில் பங்குகொள்ள வேண்டும். நாட்டுக்கு பங்களிப்பு வழங்க அனைவரும் முன்வரவேண்டும். எமக்கு இரத்தம் தேவைப்படும்போது எவ்வித பாரபட்சமும் இன்றி தேசிய இரத்த வங்கி இரத்தம் வழங்கி வருகின்றது. எனவே இரத்த வங்கியை தன்னிறைவடையச் செய்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

Leave a comment