கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் முகநூலில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் ஷபீக் ரஜாப்தீன், முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து இன்று (24) இராஜினாமா செய்துள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் தொடர்பில் முகநூலில் வெளியிட்ட கருத்து தொடர்பாக, இன்று (24) தாருஸ்ஸலாமில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கட்சியின் கொழும்பு மத்தியகுழு அங்கத்தவர்கள் முன்னிலையில் ஷபீக் ரஜாப்தீன் விளக்கம் அளித்தவேளை தனது பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
தனது தனிப்பட்ட முகநூலில், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் கட்சியின் தலைமை தொடர்பில் அநாகரிக வார்த்தைப் பிரயோகங்கள் பாவித்து ஒரு சகோதரர் கருத்து வெளியிட்டபோது, பொறுமையிழந்து, அவருக்கு மாத்திரம் பதிலளித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் தான் மிகவும் வருந்துவதாகவும் கிழக்கு மாகாண மக்களை எப்போதும் மதிப்பதாகவும் தனது பதிவினால் அசௌகரியங்களை எதிர்கொண்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.