மண்ணெண்ணெய் விநியோகத்தில் முறைகேடு – சுற்றிவளைப்பு ஆரம்பம்

218 0

மண்ணெண்ணெய்யை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபம் பற்றி சில தரப்புக்கள் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்திற்கு மத்தியிலும் கடற்றொழிலாளர்களுக்கும், மீனவர்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் குறைந்த விலையில் மண்ணெண்ணெய்யை விற்பனை செய்கிறது. மீனவர்களுக்கோ, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கோ மண்ணெண்ணெய்யை விநியோகிக்கும் நடவடிக்கை வரையறுக்கப்படவில்லை என கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதனால், தேவையான அளவு மண்ணெண்ணெய்யை விநியோகிக்குமாறு சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் மானியத்தை காரணம்காட்டி பாரியளவில் இடம்பெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலேயே சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மண்ணெண்ணெய் விநியோகத்தில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக அவசர சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக, நுகேகொட கம்சபா சந்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பகத்தின் பம்பிக்கு நேற்றிரவு சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. மேலதிக விசாரணைகளுக்கென பெற்றோலின் மாதிரி இரசாயன பகுப்பாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, கொலன்னாவையிலிருந்து கொழும்பு கலதாரி ஹோட்டலுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பௌஸரில் காணப்பட்ட எரிபொருள் தரமற்றது என தெரியவந்துள்ளது.

பெற்றோல் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பாக தகவல்கள் கிடைக்குமாயின், அது தொடர்பாக பொலிஸாருக்கு முறையிடலாம். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுற்றிவளைப்புப் பிரிவின் தொலைபேசி இலக்கமான 077 7748 417 என்ற எண்ணுடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment