பிணைமுறி விசாரணை அறிக்கையின் பக்கங்கள் குறையவில்லை

268 0

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்;திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கையின் சில பக்கங்களை காணவில்லையென சிலர் கூக்குரலிட்டபோதும், அதிலுள்ள பக்கங்கள் எவையும் குறையவில்லையென்றும் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் குறித்துக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் சரியாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை, உரிய முறையில் மேற்கொள்ளும் பொறுப்பை தான் பொறுப்பேற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி விசாரணை அறிக்கை, சட்டரீதியான சில நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வரை, அந்த ஆவணங்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்பட்டு இருப்பதாகவும் அவற்றை வெளியிடுவதன் மூலம், குற்றஞ்சுமத்தப்பட்டு இருப்பவர்கள் நன்மை அடைவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

நேற்று முன்தினம் (23), புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நகரத்தை அழகாகவும் தூய்மையாகவும் பேணுகின்ற அதேநேரம், மக்களின் வாழ்க்கையை அழகுபடுத்துவது மிகவும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட  ஜனாதிபதி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கான அங்கத்துவ அட்டைகளையும் இதன்போது வழங்கிவைத்தார்.

Leave a comment