மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் சிக்குண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, ஒன்றிணைந்த எதிரணியினரால், எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமென, முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று (23), பலாங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியுடன் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஜனாதிபதிக்கு குட்டுகிறார்கள். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தான், ஜனாதிபதி என்னைத் திட்டினார். நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். நான் ரவி கருணாநாயக்கவை வாழ்த்தினேன் என்றார்.
“மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த பின்னர் வாழ்த்துத் தெரிவித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார். ஒன்றிணைந்த எதிரணியினர், அவ்வாறானதொன்றைக் கொண்டுவரவில்லை. இது பச்சைப் பொய்.
மத்திய வங்கி விவகார விசாரணை அறிக்கை, நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அதனை நன்றாக வாசித்து, ரவியை வீட்டுக்கு அனுப்புவதற்கான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் கொண்டு வருவோம் என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கிறோம்” என்றார்.