ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த வருடம் இதே தினத்தில் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித்தாயின் வழக்கு விசாரணைகள் சரியாக ஒருவருட நிறைவின் பின்னர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தை மாதம் 24 ஆம் திகதி ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட நிலையில் 7 மாத கர்ப்பிணித் தாயொருவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து குறித்த கொலையுடன் தொடர்புடையவர்களென சந்தேகத்தின் இருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த ஒருவருடங்களாக குறித்த விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், குறித்த கொலை இடம்பெற்று இன்றைய தினம் ஒருவருடங்கள் கடந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.
இதேவேளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு குறித்த வழக்கு விசாரணைகளை மாற்றுமாறு கடந்த ஒருவருடமாக சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிவந்தநிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரிடமிருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.