யாழ் ஊரெழு பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் மற்றும் ஹன்ரர் வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது; நேற்று பிற்பகல் யாழ். குப்பிளானில் இருந்து யாழ்ப்பாண நகரத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஊரெழு பலாலி பிரதான வீதியில் நேர் எதிராக யாழ். நகரத்தில் இருந்து பயணித்த சிறிய ரக ஹன்ரர் வாகனத்துடன் மோதுண்ட நிலையில் விபத்து சம்பவித்துள்ளது.
இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய இளைஞன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியானார். அவருடன் பின்னாலிருந்து பயணித்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் நொருங்கிப் போயுள்ளது.