இந்தியா- பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்தால் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளதாகவும், அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் சமீபகாலமாக தொடர்ந்து மோதல் சம்பவம் நடந்து வருகிறது. இது குறித்து ஐ.நா. பொது சபை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது-
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ கட்டரஸ் உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறார். எந்த நாட்டில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை தீர்க்க அவர் தயாராக உள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே எல்லையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக என்ன நடந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவார்கள். இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தால் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய ஐ.நா. பொதுச்செயலாளர் தயாராக உள்ளார்.
அதுவரை இந்த விவகாரத்தில் ஐ.நா. சபை தலையிடாது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி எல்லையில் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்றே ஐ.நா. பொதுச்செயலாளர் விருப்பம் தெரிவித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.