திருப்பதி ஏழுமலையான் பற்றி சர்ச்சை கருத்து: கனிமொழி எம்.பி. மீது 7 பிரிவில் வழக்கு

335 0

திருப்பதி ஏழுமலையான் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

திருச்சியில் நடந்த நாத்திகர் மாநாட்டில் பேசிய தி.மு.க. எம்.பி. கனிமொழி திருப்பதி ஏழுமலையான் பற்றியும், திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கனிமொழியின் கருத்துகள் இந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தியதாக திருப்பதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த பா.ஜ.க. மாவட்டத்தலைவர் பெத்தி மெஹந்தர் ரெட்டி கரீம் நகர் போலீசில் கனிமொழி மீது புகார் செய்திருந்தார். ஆனால் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி கனிமொழிக்கு எதிராக வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி, கரீம் நகர் முதல்நிலை கூடுதல் ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கு எதிராக வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து கனிமொழிக்கு எதிராக கரீம் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பதி கோயில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளை புண் படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொது மக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment