பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் ரெயில்களில் அதிகமாக பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரெயில்வேக்கு கடந்த 20, 21-ந்தேதிகளில் மட்டும் ரூ.11 கோடியே 16 லட்சத்து 94 ஆயிரத்து 340 வருமானம் கிடைத்துள்ளது.
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து மக்கள் ரெயில்களில் அதிகமாக பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களிலும் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். பெண்கள் ஆபத்தான நிலையில் படிக்கட்டு வாசல் வரை நின்று பயணித்து வருகின்றனர்.
ரெயில் பயணத்திற்கு மக்கள் வருவதால் கட்டுங்கடங்காத கூட்டம் நிலையங்களிலும் காணப்படுகிறது. ரெயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெற்கு ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த 20 மற்றும் 21-ந்தேதிகளில் மட்டும் ரூ.11 கோடியே 16 லட்சத்து 94 ஆயிரத்து 340 வருமானம் கிடைத்துள்ளது.
சென்னை கோட்டத்தில் 20-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 631 பேர் பயணம் செய்துள்ளனர். மின்சார ரெயிலில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 596 பேர் பயணித்தனர். இதன் மூலம் ஒரு கோடியே 920 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மதுரை கோட்டத்தில் 55 லட்சத்து 45 ஆயிரமும், சேலம் கோட்டத்தில் 53 லட்சத்து 46 ஆயிரமும் வருமானம் கிடைத்துள்ளது.
திருச்சி கோட்டத்தில் 50 லட்சத்து 29 ஆயிரமும், திருவனந்தபுரம் கோட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சமும், பாலக்காடு கோட்டத்தில் 85 லட்சத்து 40 ஆயிரமும் ரெயில்வேக்கு வருவாய் கிடைத்து இருக்கிறது. இதே போல 21-ந்தேதியிலும் அனைத்து கோட்டங்களிலும் கடந்த ஆண்டை விட கூடுதலாக பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரெயில்வேக்கு வருவாய் அதிகரித்துள்ளது.