விழுப்புரம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி நடந்ததை கண்டித்து பள்ளிக்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள அருளவாடி கிராமத்தில் முகையூர் பஞ்சாயத்து யூனியன் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. பள்ளியில் 42 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் உள்ளனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாத இப்பள்ளி ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்திருந்த 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் அந்த மாணவியின் வாயில் துணியை வைத்து திணித்து அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு சில மாணவ-மாணவிகள் வந்தனர். இதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளியின் ஆசிரியர் இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறவேண்டாம் என்று மாணவியை சமாதான படுத்தி வீட்டுக்கு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுதார். இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதனால் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து நேற்று பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்களுடன் மாணவ-மாணவிகளும் வந்தனர். அப்போது பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் யாரும் வரவில்லை.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அந்த பள்ளியின் கதவை இழுத்துமூடி பூட்டு போட்டனர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத் தில் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிதகவல் அறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்துக்குவிரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில்ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர். அப்போது மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் இந்த சம்பவத்தை போலீசாருக்கும் பெற்றோருக்கும் தெரியபடுத்தாமல் மறைத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் கலைந்து செல்வோம் என்று அவர்கள் ஆவேசமாக கூறினர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை கைது செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும், மேலும் கல்வித்துறை அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். இதனால் மாணவ-மாணவிகள் யாரும் இன்று பள்ளிக்கு செல்லவில்லை. பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் மட்டும் வந்திருந்தனர். மாணவ- மாணவிகள் யாரும் வராததால் பள்ளிக் கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.