மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட சில அமைச்சுக்கள் தமக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாம் அவற்றினை பெற்றுக்கொள்ளப்பேதில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தம்மீது அபாண்டமாகப் பழி சுமத்துவதாகவும் குறிப்பிட்டள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்ததற்காக அரசாங்கத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்டதாக, சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், இது தனக்கு கவலையை ஏற்படுத்தியதுடன் அதனை நினைத்து கண்ணீர் சிந்தியதாகவும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்திருக்கிறார்.
கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தம்மை அச்சுறுத்துவதால் அது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட உள்ளதாகவும் ஆயினும் இரண்டு கோடிக்கு விலைப்படுபவர்கள் தாங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று (22) நடைபெற்றது,
அங்கு உரையாற்றிய மாவை சேனாதிராஜா
“என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தமிழரசுக் கட்சிப் பயணத்திலும் சரி, இத்தகைய அநாகரிகமான செயற்பாடுகளை மேற்கொண்டது கிடையாது. எமது கொள்கைகளின் தந்திரோபாயமாக மத்திய அரசுடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.
இதனடிப்படையில் தான் எமது மக்களின் பிரச்சினைகள், தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசுடன் பேசி இந்த ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொண்டோம்.
நாம் எமது தேர்தல் அறிக்கைகளிலும் அரசியற் தீர்வு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுடன் இணைந்து, எமது மக்களையும் எமது தேசத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற பிரதான விடயங்களை உள்ளடக்கி வந்திருக்கின்றோம்.
இதற்கே எமது மக்கள் தமது ஆணையை எமக்கு வழங்கி வந்திருக்கின்றார். இவ்வாறு நாம் மக்களுக்காக செய்கின்ற விடயங்களை வைத்து நாம் இலஞ்சம் வாங்கியதாக கூறுவது மிக வேதனையாக உள்ளது.
மேலும், இவ்வாறான செய்திகள் வருகின்ற போது, அவை பற்றிய விளக்கங்கள் ஊடகங்களுக்கு தெரியாதா? அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டாமா? அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்மிடம் கேட்க வேண்டுமென்ற தார்மீக கடமை இல்லையா என்றும் ஊடகங்களிடம் மாலை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்துடன், மக்களுக்காக நாங்கள் செயற்படுகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று தெரியாதவர்கள் கேட்பதில் நியாயம் இருந்தாலும் தெரிந்தவர்கள் ஏன் அவ்வாறு கேட்கின்றனர். நாம் மக்களுக்கான அரசியற் தீர்வுடன் இணைந்ததாக மக்களின் வாழ்வையும் வளப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.
நாம் அரசிடம் இரண்டு கோடி அல்ல பல ஆயிரம் கோடிகளைப் பெற்று மக்களுக்குச் சேவையாற்றியிருக்கின்றோம். இவ்வாறு நாம் செயற்படுகின்ற போது தான், இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறு இரண்டு கோடிகளுக்கு விலைபோகின்றவர்கள் நாங்கள் அல்ல. எம்மை விலைபோனவர்கள் என்று சொல்பவர்களுக்கு அது பொருந்தினாலும் எமக்கு அது பொருந்தாது. ஆயினும், குற்றச்சாட்டுக்கள் எமக்கு மிகக் கவலையை ஏற்படுத்தியிருப்பதுடன் அது எம்மை அச்சுறுத்தும் செயல் என்பதால் தேர்தல்கள் ஆணையாளரிடமும் முறையிட உள்ளோம்.
நாங்கள் கொலையாளிகளோ, கொள்ளையடிப்பவர்களோ, மோசடியாளர்களோ அல்ல. நாங்கள் எப்பொதும் பொய் சொல்லியதில்லை. மக்களுக்கு உண்மையையே சொல்லி வருகின்றோம். இந்த நிலையில் மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுதற்காகத் தான் பாராளுமன்ற உறுப்பினர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.
தமிழ் தலைமையை மாற்ற வேண்டும், தமிழரசுக் கட்சியை வேரறுக்க வேண்டும். என்று எல்லாம் பேசி வருகின்றனர். இதேபோன்று தான் கடந்த தேர்தலிலும் சம்பந்தனை, சுமந்திரனை தோற்கடிக்க வேண்டுமென்று கூறினார்கள்.
உண்மையில் நடந்தது என்ன. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியும். அன்று அவ்வாறு கூறியவர்கள் தான் இன்றும் அதனையே கூறுகின்றனர். ஆயினும் அவ்வாறு கூறி வருபவர்களது கொள்கைகள், கோட்பாடுகள் என்ன? தங்கள் திட்டங்கள் என்ன? என்பது பற்றி என்றும் சொல்லியதில்லை. ஆனால், நாம் எமது கொள்கை கோட்பாடுகளை முன்வைத்தே வருகின்றோம்.
நாம் நிதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் பெய்களைப் பேசி மக்களைத் திசை திருபாது உண்மையைப் பேச வேண்டுமென்றும் தெற்கிலே இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமென்றும் இங்கே வடக்கு கிழக்கிலே தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்றும் பலரும் போராடுகின்றனர் என்றார்.
இதேவேளை, இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜாவிடம், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வார்களா என வினவப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நாம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்கிறதென்றால் பல அமைச்சுக்களை பெற்றிருக்கலாம். சிறிய சிறிய கட்சிகளே பல அமைச்சுக்களை பெற்றிருக்கின்ற போதும், நாம் எமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என்று கூறி நிராகரித்திருந்தோம்.
அவ்வாறு ஏற்கனவே எமக்கு, வந்த அமைச்சுப் பதவிகளையே நிராகரித்திருக்கின்ற நிலையில் மீளவும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம். அது குறித்து எந்தப் பேச்சுக்களும் கிடையாது” – என்றார்.