ஜெயலலிதா நினைவிடத்தை ரூ.43.63 கோடி செலவில் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக அடுத்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று நினைவிடத்துக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் படம் வைத்து அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் மலர் அஞ்சலி செய்து வருகிறார்கள். அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அந்த நினைவிடம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வரைபடம் தயாரிக்க ஒப்பந்தம் கோரப்பட்டது. இதில் 4 நிறுவனங்கள் பங்கேற்றன. அந்த 4 நிறுவனங்களின் படங்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அந்த 4 வரை படங்களையும் ஆய்வு செய்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதில் இருந்து ஒரு வரைபடத்தை தேர்வு செய்துள்ளார். அந்த வரைபடத்தின்படி ஜெயலலிதா நினைவிடம் கட்டப்பட உள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துடன் செய்ய தமிழக பொதுப்பணி துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி கடந்த 12-ந்தேதி ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை ஒப்பந்தம் பற்றி விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தை ரூ.43.63 கோடி செலவில் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச தரத்தில் இந்த நினைவிடம் அமையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் 24-ந்தேதி ஜெயலலிதா பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதோடு ஜெயலலிதா நினைவிடத்தின் வரைபடத்தையும் அவர் வெளியிடுவார் என்று தெரியவந்துள்ளது. ஓராண்டுக்குள் ஜெயலலிதா நினைவிடத்தை கட்டி முடித்து திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஜெயலலிதா நினைவிடம் கட்ட தமிழக அரசு முதல் கட்டமாக ஏற்கனவே ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.