மொத்த விலைக்கு மண்ணென்ணை விற்கத் தடை

255 0

மண்ணென்ணையை (சிவப்பு நிறத்திலான) மொத்த விலைக்கு விற்பனை செய்ய தடைவிதித்து, பெற்றோலிய கூட்டுத்தாபனம் நாடுபூராகவுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, வாகனங்கள், தொழிற்சாலைகள், பவுச்சர்கள் மற்றும் மொத்த விலைக்கு மண்ணென்ணையை விற்க இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மண்ணென்ணெய் உள்ளிட்ட இரு வகையான மண்ணென்ணெய்கள் சந்தையில் விற்கப்படுகின்றன.

அவற்றில் இலங்கை மண்ணென்ணெய் என்பது சிவப்பு நிறத்திலானது.

இது, சாதாரண பாவனைக்காக அரசாங்கத்தின் மானியத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் மீனவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகும்.

இந்தநிலையில், 2017ம் ஆண்டில் கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் இலங்கை மண்ணென்ணெய் பாவனை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது என, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில், அதிக இலாபம் பெறும் நோக்குடன், இலங்கை மண்ணென்ணையை அதிகமாக விற்பது, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்காக, பஸ் மற்றும் பவுச்சர்களில் அனுப்புவது, டீசல்களில் மண்ணென்ணை கலந்து விற்பது போன்றனவே எனத் தெரியவந்துள்ளது.

எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே, இதுபோன்ற தவறுகளை செய்யும் விநியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவரால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment