ரஷ்யாவில் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை சகல மக்களும் கண்டுகளிப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன் அவ்வாறு கொண்டு செல்லப்படவுள்ள முதலாவது நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணம் நாளை (23) இலங்கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.
6 கண்டங்களிலுள்ள 50 நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்படும் இந்த வெற்றிக்கிண்ணத்தின் முதலாவது தரிப்பிடம் இலங்கையாகும்.
உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ணத்தை வரவேற்கும் நிகழ்வை விளையாட்டமைச்சு, இலங்கை கால்பந்து சம்மேளம் மற்றும் கொக்கா கோலா நிறுவனம் ஆகியன இணைந்து நாளை பிற்பகல் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றி கிண்ணத்தை திரைநீக்கம் செய்துவைக்கவுள்ளார்.
இதேவேளை, 24ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கிண்ணத்தை மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்குபற்றவுள்ளார்.
அதனை தொடர்ந்து உலகக்கிண்ண கால்பந்து போட்டியின் வெற்றிக்கிண்ண 24ம் திகதி பிற்பகல் மாலைதீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் எதிர்வரும் ஜூன் 14ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரை ரஷ்யாவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.