பிரதி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு

307 0

பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று(21) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் பேரில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் எம்.ஏ.எம்.தாஹிர் என்பவருக்கு எதிராக, வாக்காளர்களைத் திசை திருப்பும் வகையில் போலியான குற்றச்சாட்டுகளை அச்சிட்டு விநியோகம் செய்தார் என்றே அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இதுபற்றி அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளரிடமும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபரிடமும், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தனது வெற்றி வாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காகவே, பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசிமும், ஐக்கிய தேசிய கட்சியில் நிந்தவூர் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் போலியான குற்றச்சாட்டுகளை மக்களிடம் நூல் வடிவில் பரப்புரை செய்துள்ளார்கள்.

வாக்காளர்களைத் திசை திருப்பும் இத்தகைய நடவடிக்கைகள், ஜனநாயக விரோதச் செயலாகும். அத்தோடு, தேர்தல் சட்ட திட்டங்களை மீறும் நடவடிக்கையாகவும் இது உள்ளது. ஆதலால், இவ்வாறு செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

Leave a comment