அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் ராணுவ வீரர்களான விமானியும், இணை விமானியும் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.
நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ராணுவ வீரர்களான விமானியும், இணை விமானியும் உயிரிழந்தனர். அவர்களது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
அவர்கள் இருவரும் கொலராடோவில் போர்ட் கர்சானை தலைமையிடமாக கொண்ட படைப்பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டபோதுதான் விபத்து நடந்து உள்ளது என்றும் அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், அரிசோனா மாகாணத்தில் உள்ள போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘ஏஎச்-64’ ரகத்தை சேர்ந்தது. இந்த விபத்து குறித்து அமெரிக்க ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என அதன் செய்தி தொடர்பாளர் ஜேசன் பிரவுன் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.