நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு நார்வேயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் புறப்பட்டு சென்றது.
அந்த விமானம் அதிவேகமாக பறந்து 5 மணி 13 நிமிடத்தில் சென்றடைந்தது. பொதுவாக இது 6 மணி 6 நிமிட நேரத்துக்கு லண்டனை சென்றடையும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தை விட 53 நிமிடத்துக்கு முன்னதாக சென்றடைந்தது.
இது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நியூயார்க்கில் இருந்து லண்டனுக்கு 5 மணி 16 நிமிடத்தில் சென்றடைந்தது. அதுவே அதிவேக சாதனை படைத்ததாக கருதப்பட்டது.
தற்போது நார்வேயன் ஏர்லைன்சின் ‘போயிங் 787-9 டிரீம் லைனர்’ விமானம் 3 நிமிடத்துக்கு முன்னதாக வந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக நார்வேயன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஹரால்டு வேன்டேம் தெரிவித்தார்.
தட்ப வெப்பநிலை, காற்றின் வேகதன்மை போன்றவை சாதகமாக இருந்ததால் 53 நிமிடத்துக்கு முன்னதாகவே செல்ல முடிந்தது. நாங்கள் தட்ப வெப்பநிலை மற்றும் காற்றின் வேகதன்மையை கணிக்கவில்லை. அதை கணக்கிட்டு இருந்தால் இன்னும் அதிவேகமாக விமானத்தை ஓட்டி 5 மணி நேரத்தில் லண்டனுக்கு சென்றடைந்திருக்க முடியும் என்றார்.