பொருளாதார சரிவால் உணவு பொருட்கள் கிடைக்காமல் வெனிசுலா நாட்டு மக்கள் பசி, பட்டினியால் பெரும் அவதி அடைகின்றனர். சிலர் கடைகளில் கொள்ளையடித்தும், வன்முறையில் ஈடுபட்டும் வருகின்றனர்.
தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா நாடு உள்ளது. இதன் அதிபராக நிகோலன் மதுரோ பதவி வகுத்து வருகிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. அதை சமாளிக்க அதிபர் மதுரோ எடுத்த நடவடிக்கைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தொழிற்சாலைகள் மற்றும் உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. உணவு பொருட்களின் விலையை மிக குறைந்த விலைக்கு விற்க வலியுறுத்தப்பட்டது. விலை கட்டுப்படியாகாததால் நிறுவனங்கள் தங்கள் உணவு பொருட்கள் உற்பத்திளை நிறுத்தினர்.
இதனால் உணவு பொருள் உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவு பொருள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். பசி, பட்டினியால் கஷ்டப்படுகின்றனர்.
இதனால் உணவு தானிய குடோன்கள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. உணவு பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை பொதுமக்கள் கும்பல் கும்பலாக சென்று வழிமறித்து கொள்ளையடிக்கின்றனர். அதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், ராணுவமும் திணறுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 11-ந் தேதிக்குள் வெனிசுலாவில் 23 மாகாணங்களில் 107 கொள்ளை சம்பவங்கள் நடந்து உள்ளன. வன்முறை கும்பலின் வெறியாட்டத்தில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவை தவிர மார்க்காரிடா தீவில் கடலில் மீன்பிடி படகுகளில் இருந்து பதப்படுத்தப்பட்ட மீன்களை ஒரு கும்பல் கொள்ளையடித்தது. கராகஸ் நகரில் மேற்கு பகுதியில் உள்ள மராகே நகரில் கால்நடை பள்ளிக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த குதிரைகளை இறைச்சிக்காக கடத்தி சென்று கொன்றனர். இது போன்று பசுக்களும் கொல்லப்படுகின்றன.