மாதாந்திர, சீசன் பஸ் டிக்கெட் 15-ந்தேதிக்கு பிறகு வழங்க முடிவு

283 0

பேருந்து கட்டண உயர்வால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சீசன் டிக்கெட் மற்றும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

சென்னை மாநகர, பஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர பஸ் பாஸ், சீசன் டிக்கெட், ஒருநாள் பாஸ் ஆகியவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பஸ் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்ததால் புதிதாக சீசன் டிக்கெட்டோ, தினசரி பயண அட்டையோ வழங்கப்பட வில்லை. மாதந்தோறும் பயணம் செய்ய ரூ.1000 கட்டணமும், ஒருநாள் பயணத்துக்கு ரூ.50 கட்டணமும் முன்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இதுதவிர அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு தினமும் சென்று திரும்பி வர சீசன் டிக்கெட் முறையும் நடைமுறையில் இருந்து வருகிறது. இவற்றிற்கான பாஸ் வினியோகம் புதிய கட்டணம் நிர்ணயம் செய்யும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சீசன் டிக்கெட், மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

புதிய கட்டணம் 15-ந் தேதிக்கு பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒருநாள் முழுவதும் பயணம் செய்வதற்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆக உயர வாய்ப்புள்ளது.

அதேபோல மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக கூடலாம் என்று தெரிகிறது. மேலும் சீசன் டிக்கெட் எவ்வளவு நிர்ணயிக்கலாம் என்பது பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதுவரைக்கும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாசை பயன்படுத்தக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மாதாந்திர சீசன் டிக்கெட், தினசரி பாஸ் சலுகை பெற்று வரும் பயணிகளும் தற்போது அதிர்ச்சி அடைந்து உள்ளனர். எவ்வளவு கட்டணம் உயரப் போகிறது என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

மாதாந்திர மற்றும் சீசன் டிக்கெட் மூலம் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு குறிப்பிட்ட பல லட்சம் ரூபாய் முன்கூட்டியே கிடைத்து விடும். அதனால் பயணிகள் பெரிதாக பாதிக்கப்படாத வகையில் கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a comment