பேருந்து கட்டண உயர்வு எதிர்ப்பால் சென்னையில் குறைவான அளவில் சாதாரண பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அதனை 900 ஆக அதிகரிக்கலாமா என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
பஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
சென்னை மாநகரம் மற்றும் புறநகர் மக்களின் போக்குவரத்து தேவை மாநகர பஸ்களையும் மின்சார ரெயிலையும் அடிப்படையாக கொண்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3200 பஸ்கள் தினமும் இயக்கப்படுகின்றன. சுமார் 42 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். சாதாரண பஸ் (ஒயிட் போர்டு) எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் என வகையாக பிரித்து பஸ்கள் இயக்கப்படுகிறது.
இதில் சாதாரண பஸ்களில்தான் கட்டணம் குறை வாக இருந்தது. இப்போது இந்த பஸ்களில் கூட குறைந்த கட்டணம் ரூ.5 ஆக உயரத்தப்பட்டுள்ளது.
மற்ற பஸ்களில் இதை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும் கட்டணத்தை குறைக்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் தெரிவித்து விட்டார்.
இதனால் உயர்த்தப்பட்ட கட்டணத்தில் மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதனால் மாநகர பஸ்களில் மட்டும் கட்டணத்தை குறைக்காமல் மாற்று வழியில் பொது மக்களுக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள். மற்ற நகரங்களை காட்டிலும் தலைநகரம் சென்னையில் அரசு பஸ்சில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் சாதாரண பஸ்களை கூடுதலாக இயக்க அரசு பரிசீலித்து வருகிறது.
நூற்றுக்கும் மேலான வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களில் முக்கியமான வழித்தடங்களை கண்டறிந்து அதில் சாதாரண பஸ்களை அதிகளவு இயக்கினால் ஓரளவிற்கு இந்த பிரச் சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என அரசு கருதுகிறது.
நஷ்டத்தில் இயங்கி வந்த மாநகர பஸ்களை பெரும் நஷ்டத்திற்கு தள்ளாமல் இருப்பதற்காக குறைந்த அளவில்தான் சாதாரண பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டன. வணிக ரீதியாக எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்கள்தான் அதிகளவு இயக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஏற்பட் டுள்ள கட்டண உயர்வை சமாளிக்க அரசு சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கலாம் என்று முடிவு செய்கிறது. 300-க்கும் குறைவான அளவில்தான் சாதாரண பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் அதனை 900 ஆக அதிகரிக்கலாமா? என உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போக்கு வரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் ஓரளவிற்கு இந்த பிரச்சினையை சமாளிக்கலாம் என தெரிகிறது. மேலும் சிறிய பஸ்களிலும் சாதாரண பஸ்களுக்கான கட்டணத்தை வசூலிப்பது பற்றியும் முடிவு செய்யப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.