அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெற விரும்பும், வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் அதற்கான விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் அறிவித்து உள்ளார்.
பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் எளிதாக இயக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பொருத்தப்பட்ட சக்கரங்கள் உடைய இருசக்கர வாகனங்கள் வாங்கலாம்.
அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். இதன்மூலம் பயன்பெற விரும்பும் சென்னையில் உள்ள வேலைக்கு செல்லும் பெண்கள், தங்களுக்கு விருப்பப்பட்ட வாகனங்களை வாங்கிக் கொள்ளலாம்.
சொந்த முதலீடு அல்லது வங்கிக்கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்க வேண்டும். 125 சி.சி.க்கு மிகாமல் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பதிவு செய்யக்கூடிய வாகனத்தை வாங்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதிக்கு பிறகு உற்பத்தி செய்யப்பட்ட புதிய, மாசு ஏற்படுத்தாத வாகனமாக இருக்க வேண்டும்.
இத்திட்டத்தால் பயனடையும் பெண்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி 5-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை நேரிலோ, பதிவு அல்லது விரைவு தபால் மூலமோ சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அளிக்க வேண்டும்.
மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.