துபாய் ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே கடலில் ‘மிதக்கும் தண்ணீர் பூங்கா’ திறக்கப்பட்டு உள்ளது. துபாய் சுற்றுலாவிற்கு கூடுதல் சிறப்பம்சம் சேர்க்கும் வகையில் துபாய் சுற்றுலாத்துறை மற்றும் அமீரகத்தில் இயங்கி வரும் சுற்றுலா தனியார் நிறுவனம் ஆகியவை இணைந்து துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவில் தண்ணீரில் மிதக்கும் பூங்காவை உருவாக்கி உள்ளது. துபாய் நகரில் முக்கிய வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு சிறப்பு வாய்ந்த பகுதியான ஜுமைரா கடற்கரை குடியிருப்பு அருகே அமைந்து உள்ள இந்த பூங்கா நேற்று திறக்கப்பட்டது.
இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவானது 208 அடி நீள, 108 அடி அகல பரப்பளவில் கடல் நீரில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தண்ணீரில் மிதப்பதற்காக செயற்கை இழைகள் மூலம் உருவாக்கப்பட்ட கடினமான பிளாஸ்டிக்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் விளிம்புகள் அலுமினியம் போன்ற லேசான உலோகங்களால் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த பூங்காவிற்கு கடற்கரையில் இருந்து செல்ல சிறு படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த படகுகள் மூலம் மிதக்கும் தண்ணீர் பூங்காவினுள் பார்வையாளர்கள் செல்லலாம். அந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவில் தண்ணீர் விளையாட்டுக்கள் துபாய் சுற்றுலா சின்னத்தின் வடிவத்தில் (ஆங்கிலத்தில் துபாய் என்று எழுதப்பட்ட எழுத்துக்கள்) உள்ள தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை விமானம் மூலம் பார்க்கும் போது துபாய் என்ற ஆங்கில வார்த்தை கடலில் மிதப்பது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும்.
இங்கு பல்வேறு நீர் சறுக்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த மிதக்கும் தண்ணீர் பூங்காவில் ஒரே சமயத்தில் 500 பேர் கலந்து கொள்ளலாம். இதற்கான நுழைவுச் சீட்டு கடற்கரையில் உள்ள அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைவரும் பார்வையிட்டு நீர் சறுக்கு விளையாட்டுகளில் பங்குபெற அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கண்காணிப்பு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை துபாய் சுற்றுலாத்துறை கவனித்து வருகிறது.