கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது ஏன்?

302 0

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது அரசாங்கம் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கே என்று தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று கிண்ணையடியில் நடைபெற்ற போது உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் தேசிய கூட்டமைப்பானது, அரசாங்கத்தினுடைய பங்காளி கட்சியாக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை விட, மூன்று மடங்கு அதிகமாக உள்ள மகிந்த அணிக்கு, எதிர்கட்சி தலைவர் பதவியைக் கொடுக்காமல் சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எமது பங்காளி கட்சியை எதிர்கட்சி தலைவராக வைத்திருந்தால் நாங்கள் செய்யும் அரசியல் மோசடியை மூடி மறைப்பதற்கு, அது உதவும் என்ற காரணத்திற்காக, எதிர்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து ஒரு அரசியலமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அரசியலமைப்பை பார்த்தால் இது முற்றுமுழுதாக ஒற்றையாட்சிக்குரிய அரசியலமைப்பாக உள்ளது. சாதாரண மக்களுக்கு இதன் நுணுக்கங்கள் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது.

ஒற்றையாட்சி முறையானது சிங்கள மக்களினுடைய கையில் தான் அந்த ஆட்சி இருக்கும். ஒரு நாட்டில் 75 வீதத்திற்கு மேலாக சிங்கள மக்களின் சனத்தொகை இருக்கின்ற நிலையில் ஆட்சி அதிகாரம் ஒரு மையத்தில் இருக்குமாக இருந்தால், 75 வீதமாக மக்களின் விருப்பத்தின் படிதான் அதிகாரம் பயன்படுத்தப்படும்.

ஒற்றையாட்சி முறையை சிங்கள மக்களின் கையில் கொடுத்திருக்கின்ற படியால் தான், தென் தமிழ் தேச மண் பறி போயுள்ளது. ஒட்டுமொத்த இலங்கைத் தீவும், பௌத்த நாடு. வட கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்வது, பௌத்த நாட்டின் கனவுக்கு சவாலாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் வடகிழக்கு தாயக பிரதேசம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். தமிழ் மக்கள் வடகிழக்கில் வாழ்வது தங்களுக்கு சர்வதேச சட்டத்தின் படி ஆட்சி உரிமை இருக்கின்ற படியால் வாழ்ந்து வருகின்றனர்.

ஒரு காலகட்டத்தில் சர்வதேசம் தமிழ் மக்களுக்கு வழங்கிய சட்டத்தின் படியான ஆட்சி உரிமையை அங்கீகரிக்கக்கூடும்.

அங்கீகரித்தால் சிங்கள ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் என்ற கனவு இல்லாமல் போகும். பிரித்தானியர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை உருவாக்கி சிங்கள தலைவர்கள் ஆட்சி செய்து எங்களது தாயக நிலப்பரப்பை பறித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றார்.

Leave a comment