மாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள் 9-ந்திகதி

314 0

201609020809559312_missing-an-32-plane-search-3rd-phase-work-begins-9th_SECVPFமாயமான விமானத்தை தேடும் 3-ம் கட்ட பணிகள், 9-ந்திகதி தொடங்குகிறது என்று கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ராஜன் பர்க்கோத்ரா கூறினார்.

சென்னை தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி காலை 8.30 மணிக்கு ஏ.என்-32 ரக ராணுவ சரக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அன்று பகல் 11.45 மணிக்கு போர்ட்பிளேருக்கு சென்று சேர்ந்திருக்கவேண்டும்.

ஆனால் அன்று காலை 9.12 மணிக்கு, விமானம் மாயமானதாக ரேடார் கருவியில் தகவல் பதிவானது. இதுகுறித்து விமானப்படை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஆராய்ச்சிக்கப்பல்கள், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது.

இதுபற்றி கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி.ராஜன் பர்க்கோத்ரா, நிருபர்களிடம் கூறியதாவது:-

மாயமான ஏ.என்-32 ரக விமானம் வங்க கடலில் விழுந்து இருக்கலாம் என்று கருதப்படும் இடத்தில் கடலின் மேல்மட்டத்தில் 2 கட்டங்களாக நடந்த தேடும் பணி நிறைவடைந்தது.

அதேபோல் ஆழ்கடலில் தேடும் பணியிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடலாய்வு செய்யும் இந்திய கப்பலான சமுத்திர ரத்னாகர் மற்றும் ஆய்வு கப்பல் சாகர் நிதி கப்பல்களில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் ‘ரிமோட் ஆப்ரேட்டிங் வெகிக்கிள்’ என்ற நவீன கருவியை கடலில் உள்ளே செலுத்தி தேடும் 3-ம் கட்ட தேடுதல் வேட்டை வரும் 9 அல்லது 10-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.

சர்வதேச எல்லையை கடந்து சென்று மீன் பிடிக்கும் மீனவர்களை அண்டை நாட்டு கடற்படையினர் பிடித்து சென்று விடுகின்றனர். இதனை தவிர்ப்பதற்காகவும், மீனவர்கள் உயிர்காப்பதற்காகவும் கைரேகையுடன் கூடிய நவீன அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 13 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. வேறு நாட்டுக்கு வழிதவறி சென்றாலும் இவர்கள் மீனவர்கள் தான் என்பதை இந்த அடையாள அட்டை மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.