துருக்கியில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகியதோடு, 44 பேர் காயமடைந்தனர்.
மத்திய துருக்கியில் உள்ள எஸ்கிசேஹிர் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் புர்சா என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் உள்ள உளுதாக் ஸ்கீ ரிசார்ட்டில் விடுமுறையை களிப்பதற்காக சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
அந்த பயணிகள் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரங்கள் மீது மோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் பலியாகியதோடு, 44 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து துருக்கி அதிகாரிகள் தரப்பில், ”துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து மேற்குப் பகுதியிலுள்ள புர்சா நகருக்கு பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். மேலும் 44 பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் சாலை விபத்துகள் ஏற்படுவது சமீபகாலமக அதிகரித்து வருகிறது. 2016-ல் மட்டும் துருக்கில் சாலை விபத்தில் 7,000 பேர் பலியாகியதோடு, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.