ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள மிகவும் பிரபலமான ஒரு ஹோட்டலில் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலில் இண்டர்காண்டினெண்டல் என்ற பிரபலமான ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலுக்கு நேற்று சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளுடன் அத்துமீறி நுழைந்தனர்.
அதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர். இந்த சம்பவத்தையடுத்து ஹோட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியேறினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது.
இந்த துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் பாதுகாப்புப் படையினர் ஹோட்டலில் முதல் தளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தெரிகிறது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழந்துள்ளனரா என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
தீவிரவாதிகளிடம் அதிக அளவிலான வெடிகுண்டுகள் இருப்பதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. காபுலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வியாழன்கிழமை, அந்நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.