சிரியாவின் ஆப்ரின் பகுதியில் துருக்கி விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 6 பொதுமக்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் கடந்த ஆறாண்டுகளாக அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா மற்றும் துருக்கி நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், குர்திஸ்தானின் ஆப்ரின் நகருக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டுவரும் குர்திஸ் போராளிகளை குறிவைத்து, துருக்கி போர் விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஆறு பொதுமக்கள் மற்றும் 3 குர்திஸ்தான் போராளிகள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் குர்திஸ்தான் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.