தி.மு.க. சார்பில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கைவிடக்கோரி நாளை மு.க.ஸ்டாலின் தலைமையில் கோவை கொடிசியா மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சிறுவாணி-பவானி ஆறுகளின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அணை கட்டினால் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவை கண்டித்து கோவையில் விவசாய அமைப்புகள், அனைத்து கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
தி.மு.க. சார்பில் கேரள அரசு புதிய அணை கட்டுவதை கைவிடக்கோரி நாளை (சனிக்கிழமை) கோவை கொடிசியா மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் மற்றும் விவசாய அமைப்பினர் திரளாக கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் நாளை (சனிக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 7 மணிக்கு கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள ஓட்டலுக்கு வந்து ஓய்வெடுக்கிறார். 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மாலை 5 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. கோவை வரும் மு.க.ஸ்டாலினை வரவேற்று நகர சாலைகளில் டிஜிட்டல் போர்டுகள், பேனர்கள் வைத்துள்ளனர்.