பஸ் கட்டணம் இனிமேல் ஆண்டுதோறும் உயர்த்தப்படும்

476 0

நிர்வாக செலவுகளுக்கு ஏற்ப, சம்பளம், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வருடந்தோறும் பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு பஸ்களில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு உள்ளதா? என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் மாலைமலர் நிருபர் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் விலை உயர்வுக்காக அரசு மானியம் வழங்கி வரும் நிலையிலும் கூட வருவாய்க்கும்- செலவிற்கும் உள்ள இடைவெளி இழப்பு தினமும் ரூ.9 கோடி என்ற அளவுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

ஆனாலும் மக்கள் நலன் கருதி கடன் சுமையை அரசே ஏற்றுக் கொண்டு நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ரூ.12,059.17 கோடியை அரசு மானியமாக வழங்கி உள்ளது.

கடந்த 7 வருடங்களாக பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை. அரசு பஸ் கட்டண உயர்வை இதுவரை தவிர்த்த போதும், அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கிடவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் பஸ் கட்டணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது.

உயர்த்தப்பட்ட இந்த கட்டணம் மற்ற மாநிலங்களின் பஸ் கட்டணத்தை ஒப்பிடுகையில் பெரும்பாலும் குறைவாகவே உள்ளது.எனவே பஸ் கட்டணத்தை குறைக்க வாய்ப்பு இல்லை. பொதுமக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.

7 வருடங்களாக பஸ் கட்டணம் உயர்த்தப்படாமல் இப்போது திடீரென உயர்த்தப்பட்டதால் மக்களுக்கு பெரிய சுமை ஏற்பட்டு உள்ளதாக பலதரப்பட்ட மக்களும் கருதுகிறார்கள்.

எனவே இதை தவிர்ப்பதற்காக இனிமேல் நிர்வாக செலவுகளுக்கு ஏற்ப, சம்பளம், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வருடந்தோறும் பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது அதிகமான கடன் சுமை இருந்தாலும் அதை முழுமையாக ஈடுகட்டும் அளவுக்கு பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடன் சுமைக்கான பணத்தை அரசு தந்து கொண்டிருக்கிறது.

ரூ.300, ரூ.1000-த்துக்கான மாத பஸ் பாஸ் வாங்கி வைத்திருப்பவர்கள் அதில் குறிப்பிட்டுள்ள தேதி வரை பயன்படுத்தி கொள்ளலாம்.

கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்டால் கண்டக்டர்கள் கனிவுடன் பதில் கூறுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment