அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியை ஏற்று 25 நாட்களாக நடந்த பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளது.
இன்று 25-வது நாளாக போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக பட்டாசு மற்றும் அதன் உபதொழிலை நம்பியிருக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர்.
பட்டாசு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், மறியல் போன்றவை நடந்து வந்த நிலையில், நேற்றிரவு பட்டாசு ஆலை உரிமையாளர்களுடன் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, 25 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக ஆலை உரிமையாளர்கள் அறிவித்தனர். வரும் திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.