தமிழகத்தில் திடீரென நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பஸ் கட்டண உயர்வினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது. அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது. இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
குளிர்சாதன பஸ்கள், வெளியூர்களுக்கு செல்லும் புறநகர் பஸ்கள் மற்றும் விரைவு பஸ்களுக்கான கட்டணமும் கணிசமான அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான சில்லரை மட்டும் எடுத்துக்கொண்டு பஸ் நிலையங்களுக்குச் சென்ற கூலித் தொழிலாளர்கள், டிக்கெட் விலை உயர்வைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.