நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி – ஜனாதிபதி சந்திப்பு

236 0

இலங்கையுடனான உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் நாட்டிற்கு வருகைதந்துள்ள நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி ஜெனரல் ராஜேந்திர சேத்ரி (General Rajendra Chhetri) இன்று (19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் இரு நாட்டு இராணுவங்களினதும் பங்களிப்பு, தேசிய இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் பயிற்சி நடவடிக்கைகளுக்கான இருதரப்பு உடன்படிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட மோசமான பூமி அதிர்ச்சியின்போது இலங்கை இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துரித உதவிகள் மிக உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாக குறிப்பிட்ட நேபாள இராணுவ பதவிநிலைப் பிரதானி, நேபாள அரசாங்கத்தின் சார்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையே நீண்ட காலமாக நிலவிவரும் சமய, கலாச்சார, மற்றும் சமூக தொடர்புகளை இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அந்த தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இருநாட்டு இராணுவத்தினரிடையே பயிற்சி மற்றும் தொழினுட்ப அறிவினை பரிமாறிக்கொள்ளும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தினை இதன்போது சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விசேடமாக பாரிய அனர்த்த நிலைமைகளின்போதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைளிலும் அது மிகுந்த முக்கியத்துவம் உடையதாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

சந்திப்பினை நினைவுகூரும் வகையில் நினைவுப் பரிசுகளும் இதன்போது பரிமாறப்பட்டன

Leave a comment