மலையகத்தில் அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்-பழனி திகாம்பரம்

257 0
மலையகத்தில் 50 வருட காலமாக ஆட்சி செய்தவர்களுக்கு கிராமம் ஒன்று அமைக்க முடியவில்லை. 7 பேர்ச் காணியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. காணி உறுதிப்பத்திரத்தையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. பிரதேச சபைகளையும் அதிகரிக்க முடியவில்லை. இதெல்லாம் செய்யாத இவர்கள் நாங்கள் மக்களுக்கு தேவையான இவ்வாறான சேவைகளை முன்னெடுக்கின்ற போது, நாங்கள் செய்திருப்போம், நாங்கள் கேட்டிருப்போம், நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை தான் இவர்கள் முன்னெடுக்கின்றனர் என மக்கள் மத்தியில் கூறி வருகின்றார்கள் என மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நோர்வூட் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று மாலை நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இந்த மூன்று வருட காலப்பகுதியில் வீடுகளை கட்டி வருகின்றோம். பாதைகளை அபிவிருத்தி செய்கின்றோம். பல உட்கட்டமைப்பு வசதிகளை செய்து வருகின்றோம்.

இந்திய அரசாங்கம் 4000 வீடுகளை வழங்கியது. அந்த வீடமைப்பு திட்டத்தையும் இவர்கள் 4 வருடமாக இழுத்தடிப்பு செய்தனர். நான் அமைச்சராக வந்தபின் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய தூதுவரிடம் கதைத்து இந்திய வீடமைப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

எனது அமைச்சின் ஊடாக வீடமைப்பு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனவே மக்கள் அனைவருக்கும் நிச்சயமாக வீடுகள் கிடைக்கும். மலையகத்திற்கு என்று சொல்லி அதிகார சபை ஒன்று இல்லை.

தோட்ட கம்பனியின் கீழ் இயங்கி வந்த ட்ரஸ்ட் நிறுவனத்தை வைத்துக்கொண்டு அவர்களின் கீழ் நாம் செயற்பட்டு வந்தோம். இந்த ட்ரஸ்ட் நிறுவனம் அரசாங்கத்திற்கு பொறுப்பு கூறும் நிறுவனம் அல்ல. கடந்த காலங்களில் ட்ரஸ்ட் நிறுவனத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடாக நானும், இராதாகிருஷ்ணன், மனோ கணேசன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் சென்று இது தொடர்பாக கதைத்து இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தற்பொழுது அதிகார சபையை நாம் பெற்றுள்ளோம். இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மற்றுமோர் வெற்றி.

இந்த அதிகார சபை அரசாங்கத்தின் கீழ் செயற்படும். யாரும் ஊழல் செய்ய முடியாது. கடந்த காலங்களில் எம்மக்கள் கம்பனிகாரர்களிடம் பல பிரச்சினைகளை சந்தித்தனர்.

ஆனால் இன்று இதெல்லாவற்றையும் மாற்றி இந்த அரசாங்கம் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றன. தொடர்ந்தும் இந்த அரசாங்கம் புதிய செயற்பாடுகளை முன்னெடுக்கும். எனவே இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Leave a comment