யாழில் பயங்கரம் – மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின் பிஞ்சு மகள் பலி

269 0

யாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் தற்கொலை செய்யும் நோக்கில் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, பத்திரகாளி கோவில் வீதியில் உள்ள தனது தாயின் வீட்டுக்குள் நுழைந்த மகன், கைக் கோடரியொன்றினால் தனது தாயையும் சகோதரனின் மகளையும் வெட்டியுள்ளார்.

இந்நிலையில், சகோதரனின் மகளான 3 வயதுடைய தனுஷன் நிக்ஷயா சம்பவ இடத்திலேயே கோடரித் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தாயாரான 55 வயதுடைய பரமேஸ்வரி என்பவர் கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனாவைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளையின் தாயார் கர்ப்பிணி என்பதால் அவரது கணவனுடன் கிளினிக்கிற்கு சென்றுள்ள நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகனான குணரத்தினம் ஈஸ்வரன் என்பவர் தற்கொலை செய்யும் நோக்குடன் நஞ்சருந்தியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்திற்கு குடும்பப் பிணக்கே காரணம் என சந்தேகிக்கும் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment