மின்சார சபை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வின் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளன. மின்சார சபையின் 200 கோடி ரூபா நிதியிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இதனை வெளிப்படுத்தாமல் இருக்கவே மின்சார சபை பொறியியலாளர்களுக்கு சட்டவிரோதமாக ஊழிய உயர்வு வழங்கப்பட்டது என இலங்கை மின்சார சபை தொழில்சங்க தலைவர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் ஊழியர்களின் ஊதிய உயர்விற்கான போராட்டம் மற்றும் வேலைநிறுத்தம் நேற்றோடு இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பிரதமர் மற்றும் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க வலுவூட்டல் அமைச்சருக்கும் இது தொடர்பாக தமது மகஜரை கையளிக்க இலங்கை மின்சார சபையின் தொழிலாளர் சங்கம் முனைந்திருந்தது.
இதன் போது பிரதமர் அலுவலகம் வரை சென்று பிரதமரை சந்திக்க முடியாமல் சென்றமையினால் அவரின் செயலாளரிடம் தமது மகஜரை கையளித்துவிட்டு வந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
2014 ஆம் ஆண்டு முன்னைய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஊதிய உயர்வின்போது மோசடிகள் இடம்பெற்றன. அது போல் மின்சார சபை யின் நிதியில் 200 கோடி ரூபா நிதித் தொகையிலும் மோசடிகள் இடம்பெற்
றுள்ளன. இவ்வாறான ஊழல் மோசடிகளை மறைப்பதற்காக கப்பமாக செலுத்தப்பட்டதே மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கு 2014 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் திகதி வழங்கப்பட்ட ஊதிய உயர்வாகும்.
முன்னைய அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர் , பொறுப்பான அமைச்சர், மின்சார சபை தலைவர்கள் தற்கால தலைமைகள் அனைவரும் இதன் பங்காளர்களேயாவர். எனவே அனைவரும் இது தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களே. அதனுடன், எது எவ்வாறிருப்பினும் இன்று கூடியுள்ள நாம் எமக்கு உரியவர்களிடமிருந்து உரிய தீர்வு கிடைக்கும் வரையில் எமது பணிகளுக்கு திரும்ப போவது இல்லை.
மேலும் நேற்று நாம் எமது எதிர்ப்பினை தெரிவித்திருந் தோம். இதன்போது எமது ஊழியர்கள் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளாக்கப்பட்டனர். எனவே இதனை கண்டித்தும் இன்றும் நாம் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
எமக்கு இது தொடர்பான உரிய தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. இன்று (நேற்று) சமாதானமாக எமது கோரிக்கை அடங்கிய மகஜரினை வழங்கி விட்டு திரும்பவுள்ளோம். ஆனால் அதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார பணிகள் நிறைவுற்ற அன்று மீண்டும் நாடுபூராகவுமிருந்து கொழும்பிற்கு வந்து பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சிலர் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை முதல் இலங்கை மின்சார சபையின் தலைமைக் காரியாலயத்தில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
தமது எதிர்ப்பை தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கறுப்பு கொடியேற்றி ஊழல் மோசடிகளை தடுத்திடு, சம்பள உயர்வு தா என்ற பதாகைகளுடன் இலங்கை மின்சார சபைக்கும், அரசாங்கத்திற்கும் எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் கோஷம் எழுப்பியவாறு காணப்பட்டனர்.
இதன் பின்னர் லேக்கவுஸ் சுற்று வட்டாரத்தில் இருந்து புறப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சென்று கொழும்பு 07 இல் அமைந்துள்ள பிரதம அமைச்சர் அலுவலகத்தின் முன் வந்தடைந்தனர். பிரதம அமைச்சரின் அலுவலகத்திற்கு முன் வந்தடைந்த இவர்கள் பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்புறமாக வீதியோரமாக தரித்திருந்து கோஷம் எழுப்பியவாறே காணப்பட்டனர். பின்னர் பொலிஸாருடன் கலந்துரையாடி பிரதமரை சந்தித்து தமது முறைப்பாடு மற்றும் கோரிக்கை அடங்கிய மகஜரை அவரிடம் கையளிக்கச் சென்றனர். ஆயினும் பிரதமரை சந்திக்க கிடைக்காமையினால் பிரதமரின் செயலாளரிடம் தமது முறைப் பாடு மற்றும் கோரிக்கை அடங்கிய மகஜரை கையளித்து திரும்பினர்.
மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு பேரணியாக மின்வலு மற்றும் மீள் புத்தாக்க வலு அமைச்சுக்கும் சென்று அமைச்சருடன் இது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டு பின்னர் சமாதானமாக கலைந்துசென்றனர்.