பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் இன்று போலியோ சொட்டு மருந்து அளிக்கச் சென்ற இரு பெண் ஊழியர்களை அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் போலியோ நோயை ஒழிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தலைமையிலான தொண்டு நிறுவனம் ஏராளமான நிதியுதவி அளித்து வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் ஒத்துழைப்பால் பாகிஸ்தானில் போலியோ நோய்சார்ந்த மரணங்கள் வெகுவாக குறைந்து வருகின்றன.
இந்நிலையில், இங்குள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 24 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் தீவிர போலியோ ஒழிப்பு முகாம் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்முகாமின் கடைசி நாளான இன்று குவெட்டா நகரில் உள்ள ஷால்கோட் பகுதியில் வீடுவீடாக சென்று குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கும் பணியில் சில பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டதில் இரு பெண்கள் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து சொட்டு மருந்து முகாமில் பணியாற்றும் ஊழியர்கள்மீது தீவிரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.