ஐ.ஐ.டி.கள் சமுதாயத்துக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட கருத்தரங்கு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அதனை திறந்துவைத்து பேசியதாவது:-
கல்விநிறுவனங்கள், தொழிற்சாலைகள், பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடும் வகையில் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் ஆராய்ச்சி பூங்காவை அமைத்துள்ளது. எனவே சென்னை ஐ.ஐ.டி.யை மாதிரியாக கொண்டு ஆராய்ச்சி பூங்காக்கள் உள்ள இந்தியாவின் மற்ற ஐ.ஐ.டி.களை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். ஐ.ஐ.டி.யில் சமுதாயத்திற்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடியுங்கள்.
புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பது இந்தியாவில் குறைவு. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தான் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்கும் என்று நினைக்கிறோம். இந்தியாவில் நிறைய பேருக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால் அதற்கான சூழ்நிலையை அரசு உருவாக்க வேண்டும். அதற்காக முதல்கட்டமாக பள்ளிக்கூட அளவிலேயே ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிவுசெய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்திய அளவில் 2,400 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் 800 பள்ளிகளில் ‘அடல் டிங்கரிங் லேப்’ தொடங்கப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு தலா ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பணத்தில் இணையதள வசதி ஏற்படுத்துதல், ரோபோட்டிக் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனால் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல பள்ளிக்கூட அளவிலேயே ஆராய்ச்சி தொடங்கி உள்ளது. இவ்வாறு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
விழாவில் ரெயில்வே அமைச்சக ஆலோசகர் பேராசிரியர் அசோக் ஜூஞ்சன் வாலா, சென்னை ஐ.ஐ.டி.யின் இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார். அந்த கண்காட்சியில் இருந்த மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவில் ஏறி அவரே அதை சிறிது தூரம் ஓட்டினார். பின்னர் கண்காட்சியில் இடம்பெற்ற ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒத்துழைப்பால் நிறுவனங்கள் தயாரித்துள்ள சாதனங்களை அவர் பார்வையிட்டார்.