போலி செய்திகள் வெளியிட்டதாக ஊடகங்களுக்கு போலி செய்தி விருது அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், ஊடகங்களுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. ஜனாதிபதி தேர்தல் நடந்தபோதே, பிரசாரத்தின்போது ஊடகங்கள் பாரபட்சமான முறையில் செய்திகள் வெளியிடுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். அப்போது அவர் ‘பேக் நியூஸ்’ (போலி செய்தி) என்ற வார்த்தையை உருவாக்கி பயன்படுத்தினார்.
இந்த நிலையில் இப்போது போலி செய்திகள் வெளியிட்டதாக ஊடகங்களுக்கு போலி செய்தி விருது அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்டு உள்ள பட்டியல், குடியரசு கட்சியின் தேசிய கமிட்டியின் இணையதளத்திலும் இடம் பெற்று உள்ளது.
விருது பட்டியலில் முன்னணியில் இடம் பெற்று இருப்பது ‘நியூயார்க் டைம்ஸ்’ ஏடு ஆகும். ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றபோது அந்த ஏடு, அமெரிக்க பொருளாதாரம் ஒருபோதும் மீளாது என்று கூறி இருந்தது. ஆனால் அது பொய் செய்தி என்றும், அமெரிக்க பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
2-வது இடம் ‘ஏ.பி.சி. நியூஸ்’ நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதில், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினை ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷியாவுடன் தொடர்பு வைத்துக்கொள்ளுமாறு டிரம்ப் அறிவுறுத்தினார் என்று கூறப்பட்டது பொய் செய்தி என டிரம்ப் கூறுகிறார். பின்னர் அந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் பிரையன் ரோஸ் அங்கிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என கூறப்பட்டு உள்ளது.
‘சி.என்.என்.’ நிறுவனம் விருது பட்டியலில் 3-வது இடம் பிடித்தது. டிரம்பும், அவரது மகன் டொனால்டு ஜூனியர் டிரம்பும் பொதுவெளியில் விக்கி லீக்ஸ் ஆவணங்களை வைப்பதற்கு முன்பாக திருட்டுத்தனமாக அவற்றை பார்த்தார்கள் என செய்தி வெளியிட்டது. பின்னர் அந்த செய்தி, திருத்தி வெளியிடப்பட்டது. இப்படி பொய்யான செய்திகள் வெளியிட்டதாக ‘டைம்’, ‘வாஷிங்டன் போஸ்ட்’ ஏடுகளுக்கும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2-ந் தேதி, “நேர்மை இல்லாத மோசமான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு விருதுகள் அறிவிப்பேன்” என்று டிரம்ப் கூறி, அதன்படி இப்போது இந்த விருதுப்பட்டியலை வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.