உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்லியன் ரூபா பெறுமதி மிக்க சொத்து அடையாளம்!

227 0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும் மஹிந்த ராஜபக்சவின் உறவினருமான உதயதுங்க வீரதுங்கவுக்குச் சொந்தமான சுமார் 94 மில்லியன் ரூபா பெறுமதி மிக்க சொத்துக்களை தாம் அடையாளம் கண்டிருப்பதாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (18) தெரிவித்தனர்.

2006ஆம் ஆண்டு உக்ரேனியத் தயாரிப்பான ‘மிக் 27’ ரக விமானத்தைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக ஒரு அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதிலேயே மேற்படி கூறப்பட்டுள்ளது.

தொம்பே பகுதியில் நாற்பது மில்லியன் ரூபா பெறுமதியான எட்டு ஏக்கர் நிலப்பரப்பும் 25 மில்லியன் ரூபா பெறுமதியான ஒரு ஏக்கர் நிலப்பரப்பும் பொரளை, ‘ட்ரில்லியம் ரெஸிடன்ஸி’ அடுக்கு மாடிக் குடியிருப்பில் 29 மில்லியன் ரூபா பெறுமதியான வீடொன்றும் உதயங்கவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையைத் தாக்கல் செய்த நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மேற்படி சொத்துக்களை விற்பதைத் தடை செய்யும் வகையில் காணிப் பதிவாளர் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறும் கேட்டிருந்தனர்.

இதேவேளை, 20 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை செய்யவும் வங்கிக் கணக்குகளைப் பரிசோதனை செய்யவும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a comment